(இராஜதுரை ஹஷான்)

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது  திருத்த ஏற்பாடுகள்     சட்டவாக்கத்துறைக்கும், நிறைவேற்றுத்துறைக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் விதமாக காணப்படுகிறது. இந்நிலைமை தொடர்ந்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் ஏற்படும். தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே 20வது திருத்தத்தின் சட்ட மூல  வரைபு மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது என தேசிய மரபுரிமை, கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

 அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில்  ஆளும் தரப்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துகள் தொடர்பில்  வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் அரச நிர்வாகத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் காணப்பட்டமையினால்  பல முரண்பாடுகள்  அதிகார பிரயோகத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்டது.        

19வது திருத்தம்  பாதக விளைவுகளை ஏற்படுத்தினாலும், பல சாதகமான தன்மைகளையும் கொண்டிருந்ததை அரசியலுக்கு அப்பாற் சென்று ஏற்றுக்கொள்ளவேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் சிறந்த ஒரு நிர்வாகத்துக்கான ஆரம்பமாக அமைந்தது..

 புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியலமைப்பு திருத்தம்  ஆகியவை குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. புதிய அரசியலமைப்பினை விரைவாக  உருவாக்குவது சாதாரண விடயமல்ல, பல்லின மக்கள் வாழும் நாட்டில் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அனைத்து தரப்பினரது அரசியல் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.  வளர்முக  நாடுகளில்  அரசியலமைப்பு சிறந்த முறையில் காணப்படுவதற்கு    பல்லின மக்களுக்கு மதிப்பளித்துள்ளமை பிரதான காரணியாக அமைந்துள்ளது.

     தற்காலிக ஏற்பாடாகவே  அரசியலமைப்பின் 20வது திருத்தம்  காணப்படுகிறது. தற்காலிக   ஏற்பாடாக காணப்பட்டாலும் அவை முரண்பாடுகளை  தோற்றுவிக்கும் விதத்தில் அமைய   கூடாது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20வது திருத்த சட்ட மூல வரைபு    நிறைவேற்றுத்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை    தோற்றுவிக்கும்  தன்மையில் காணப்படுகிறது.  கால சூழ்நிலை எத்தரப்பிற்குள்ளும்  முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம். நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்வாக தன்மை இந்த அரசாங்கத்திலும் ஏற்பட கூடாது என எதிர்பார்க்கிறோம்