(எம்.மனோசித்ரா)

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என்றும் இதன் போது 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மதியம் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அத்தோடு நிலப்பகுதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைப்பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

கடற்பிராந்தியங்களில் புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை வழியாக மன்னார் மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்புக்களிலும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதன் போது கடல் அலையானது 2.5 - 3 மீற்றர் உயரத்திற்கு உயர்வடையும் என்பதால் மீனவர்களை மிக அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.