(எம்.மனோசித்ரா)

கைதிகளால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளில் அசாதாரணமானவற்றை நிறைவேற்ற முடியாது. நாட்டில் திலீபனைத் தவிர வேறு யாரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழக்கவில்லை. 

எனவே பூஸா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் போராட்டமும் ஓரிரு நாட்களில் நிறைவடைந்துவிடும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெறிசலைக் குறைப்பதற்காக பழைய போகம்பர சிறைச்சாலையை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று சனிக்கிழமை அங்கு கண்காணிப்பு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

போராட்டங்களில் ஈடுபடுகின்ற கைதிகளே நாட்டில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களாவர். கைதிகளின் கோரிக்கைளில் நிறைவேற்றக் கூடியவற்றை மாத்திரமே நிறைவேற்றிக் கொடுக்க முடியும். அசாதாரணமான கோரிக்கைகளை எம்மால் நிறைவேற்றிக் கொடுக்க முடியாது.

இலங்கையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் உயிரிழந்தவர் திலீபன் மாத்திரமே. அவரும் உண்ணா விரதத்தினால் உயிரிழக்கவில்லை. அவர் ஒரு நோயாளியாவார். எனவே தான் அவரை உண்ணாவிரதமிருக்குமாறு பிரபாகரன் கூறினார்.

 அவரைத் தவிர நாட்டில் உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டுகின்ற அனைவரும் ஓரிரு நாட்களில் அதனை நிறைவு செய்துவிடுவார்கள். இங்கும் அதுவே இடம்பெறும். குற்றங்கள் செய்பவர்களுடைய நிலைமை அல்லது தகுதியை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது சட்டத்தரணிகளை பரிசோதனை செய்யாமல் சிறைச்சாலைக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 

பாதுகாப்பு செயலாளராக இருக்கின்ற என்னையே சோதனைக்குட்படுத்தும் போது அவர்களை சோதனைக்குட்படுத்தாமல் சிறைச்சாலைக்குள் அனுமதிக்க முடியாது. பூஸா மிக பாதுகாப்பான சிறைச்சாலையாகும். எனவே அங்கு செல்லும் யாராக இருந்தாலும் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவர்.

குற்றமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும். அதனடிப்படையில் தான் பொலிஸ் , இராணுவம் , சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். வெளியிலுள்ள குற்றவாளிகளை இனங்காண்பதற்கு முன்னர் எம்முடன் இருக்கும் குற்றவாளிகளை இனங்காண வேண்டும் என்றார்.