-ஹரிகரன்

இலங்கையின் புதிய அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த முனைகிறது.

நாட்டின் மோசமான பொருளாதார நிலையும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பற்றாக்குறையும், கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையும் தற்போதைய அரசாங்கம் இறக்குமதிகளை கிட்டத்தட்ட தடைசெய்கின்ற அளவுக்கு சென்றிருக்கிறது.

கொரோனா தொற்றினால் ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளில் மந்தநிலை காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் இறக்குமதிகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இறக்குமதிகளை விட ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் கூறுகின்றன. இது இயல்பான ஒரு சூழலில் நிகழ்ந்த ஒன்று அல்ல.

ஏற்றுமதிக்கான கதவு திறக்கப்பட்டும், இறக்குமதிகளுக்கான கதவு அடைக்கப்பட்டும் உள்ள சூழலில் தான், இது சாத்தியமாகியது.

1992-batch IFS officer Gopal Baglay appointed Indian High Commissioner to  Sri Lanka - Shortpedia News App

இந்த செயற்கையான மாற்றத்தை அரசாங்கத்தினால் நிரந்தரமாகப் பேண முடியுமா என்பது இப்போதுள்ள சிக்கல்.

ஒரு பொருளாதாரத்தில் ஏற்றுமதி- இறக்குமதி இரண்டுக்குமே சமமான மதிப்பு உள்ளது.

ஏற்றுமதியினால் உள்நாட்டு பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. உற்பத்திக்கு கூடுதல் இலாபம் கிடைக்கிறது.

இறக்குமதிகளால், சந்தையில் போதியளவு பொருட்கள் கிடைப்பதுடன், வர்த்தகச் சுழற்சியும் அதிகம் நடக்கிறது. அதற்கும் அப்பால், அரசாங்கத்துக்கு வரிகள், தீர்வைகள் மூலம் வருமானமும் அதிகளவில் கிடைக்கிறது.

இந்த இரண்டின் மூலமும் தான், சர்வதேச வர்த்தக தொடர்புகள், செயற்பாடுகளை ஒரு அரசாங்கத்தினால் சமநிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மாத்திரம் வைத்துக் கொண்டு, பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்த முடியும் என்ற விம்பத்தை காண்பிக்க முனைகிறது.

இது எப்படி- எந்தளவுக்குச் சாத்தியப்படப் போகிறது என்பது தான் கேள்வி.

ஏனென்றால், சர்வதேச சமூகத்துடன் பொருளாதார தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கு தனியே இராஜதந்திர உறவுகள் மாத்திரம் போதாது.

நாடுகளுடனான பரஸ்பர வர்த்தக தொடர்புகளும் அவசியம்.

வர்த்தக தொடர்புகளை நியாயமான முறையில், இரண்டு தரப்புகளுக்கும் பலனளிக்கக் கூடிய வகையில் பேணுவதன் மூலம் தான் நம்பிக்கையான பங்காளி என்ற பெயரை பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதைய அரசாங்கம் ஒருவழிப் பாதை வர்த்தகத்தையே தமது திட்டமாக வைத்திருக்கிறது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்தி அல்லது தடை செய்துவிட்டு, ஏற்றுமதியில் மாத்திரம் கவனம் செலுத்த முனைகிறது.

இது சர்வதேச சந்தை கோட்பாடுகளுக்கு முரணானது. 

இறக்குமதிகளை செய்ய முடியாது, ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தருமாறு கோருவது இருதரப்பு வர்த்தகத்தின் அடிப்படை அம்சங்களை மீறுவதாகும்.

இவ்வாறான ஒரு கொள்கையுடன், சர்வதேச சமூகத்தின் முன்பாக அரசாங்கத்தினால் போய் நிற்க முடியாது.

தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள பொருளாதாரக் கொள்கையை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஏனென்றால், இது இருதரப்பு வர்த்தக கொள்கைக்கு முரணானதாக, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை மீறுவதாக உள்ளது என்று உணர ஆரம்பித்திருக்கின்றன.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அண்மையில் ஒரு செவ்வியில், இலங்கையில் இருந்து அமெரிக்கா ஆண்டு தோறும் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்ற போதும், அமெரிக்காவில் இருந்து இலங்கை 360 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையே இறக்குமதி செய்கிறது என்று கூறியிருக்கிறார்.

இது சமமான வர்த்தகம் அல்ல. ஆனாலும் அமெரிக்கா இதனை அனுமதித்து வந்திருக்கிறது. அதற்கு வர்த்தக நோக்கிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் உள்ளன.

மூலோபாய நலன்களும், அரசியல் நலன்களும் அதற்கான காரணங்களாக குறிப்பிடலாம். இலங்கை ஏற்கனவே சமனிலையற்ற ஒரு ஏற்றுமதி- இறக்குமதி அணுகுமுறையைத் தான் கடைப்பிடித்து வருகிறது.

இலங்கையின் ஏற்றுமதியில், 28.6 வீதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், 24.9 வீதம் அமெரிக்காவுக்கும் தான் இடம்பெறுகிறது.

இந்தியா 6.7 வீதமும், சீனா 3.7 வீதமும் தான் இலங்கையின் ஏற்றுமதியில் பங்களிக்கின்றன. ஆனால், இலங்கையின் இறக்குமதி அதற்கு எதிர்மாறானது.

இந்தியாவில் இருந்து 21.1 வீதமான இறக்குமதியும், சீனாவில் இருந்து 19.7 வீதமான இறக்குமதியும் இடம்பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 8 வீத இறக்குமதி தான் நடக்கிறது. அமெரிக்காவில் இருந்து அதனை விட மிகக்குறைவு.

ஆனாலும் இந்த சமனிலையற்ற வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் குழப்ப விரும்பவில்லை.

ஏனென்றால், இலங்கையுடனான மூலோபாய உறவுகளை இந்த நாடுகள் விரும்புகின்றன.

இலங்கையிடம் இருந்து வாங்கக் கூடிய ஆடைகளையோ, வாசனைத் திரவியங்களையோ, தேயிலையையோ இந்த நாடுகளால் இந்தியாவில் இருந்தோ, இந்தோனேசியா, வியட்நாம், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்தோ வாங்க முடியும்.

ஆனால் இலங்கையுடன் வர்த்தகம் செய்ய அந்த நாடுகள் விரும்புகின்றன. அதனால் தான் சமனிலையற்றதாக இருந்தாலும், தொடர்புகளை பேணுகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்தில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இறக்குமதிகளுக்கு மேலும் தடைகளை விதிக்கும் போது, சமநிலையற்ற வர்த்தகத்தை பொறுத்துக் கொள்ளும் நாடுகள் அதனை அனுமதிக்கத் தயாராக இருக்குமா என்பது சந்தேகம்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பதிலுக்கு, தாங்களும் இறக்குமதிகளை கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்தால் இலங்கையின் நிலை பரிதாபமானதாகி விடும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் கூட, இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை விரும்பவில்லை. ஏனென்றால் அந்த நாடுகளின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு விதித்துள்ள தடையினாலும், வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினாலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.

மஞ்சள் இறக்குமதியாளர்களின் பிரச்சினை குறித்து இந்திய தூதுவர் கோபால் பாக்லே இரண்டு கடிதங்களை அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

இந்தியாவின் ஏற்றுமதிகள் பாதிக்கப்படுகின்ற போது, இலங்கையின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது.

இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல்... -  Newsfirst

இந்த விடயத்தில் சீனாவும் சும்மாயிருக்கக் கூடிய நாடு அல்ல. 

சீனா வணிக நலன்களுக்காக தலையீடு செய்கிறது என்பதை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் கொலம்பகே அண்மையில் ஒரு செவ்வியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான ஒரு பின்புலத்தில் இலங்கை தனது மூலோபாய நண்பர்களையும், வர்த்தக நண்பர்களையும் பகைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் முற்படுவதில் தவறில்லை. 

ஆனால், அதற்கான சாத்தியங்களை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை. 

அத்துடன் வெளிநாடுகளுடனான வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளின் மதிப்பையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூடிய பொருளாதார கொள்கை ஒன்றின் நுழைவாயிலில் நிற்கும் இலங்கை, பொருளாதார புதிய கொள்கை வகுக்கப்படும் வரையில் ஏனைய நாடுகளுடனான உடன்பாடுகள் குறித்து தீர்மானம் எடுப்பதில்லை என்ற முடிவையும் எடுத்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக படுத்துக் கிடக்கும் இலங்கையை இப்போதைக்கு முன்னே கொண்டு செல்வதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றே தெரிகிறது.

இவ்வாறான நிலையில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, ஒருவழி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை உயர்த்தினாலும், பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தாது.

ஏனென்றால் வர்த்தக சுழற்சி தடைப்படும் சூழலில், இறக்குமதி தடைகளால், ஏராளமான தொழில்முயற்சிகளும், வேலையிழப்பும் ஏற்படும் நிலையில், பாதகமான விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.