இது தானா செல்வாக்கு?

13 Sep, 2020 | 03:52 PM
image

-கபில்

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியின் உறுப்பினரான, அரிசிமலை பௌத்த விகாரையில் உள்ள பௌத்த பிக்கு, திரியாயில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என்று விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறார்.

இதனை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது இரா.சம்பந்தனின் பொறுப்பு.

ஆனாலும், திரியாய் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஏனென்றால், கிழக்கு தொல்பொருள் செயலணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகிறது. ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் அதற்கு உள்ளது. 

தேவையான அதிகாரங்களைக் கொண்ட அந்தச் செயலணிக்கு முன்பாக, இரா.சம்பந்தனின் முறைப்பாடு ஒன்றும் ஜனாதிபதியிடம் எடுபடப் போவதில்லை.

கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழ்பேசும் பிரதிநிதிகள் இடம்பெறாமையை சுட்டிக்காட்டி, ஜூன் 15ஆம் திகதி இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு இன்னமும் பதில் அனுப்பப்படவில்லை என்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் இரா.சம்பந்தன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் அனுப்பப்ப்படவேயில்லை என்பது சாதாரண விடயமல்ல.

இந்தப் பிரச்சினை விடயத்தில், இரா.சம்பந்தனின் கோரிக்கையை ஏற்கலாம், மறுக்கலாம். அது ஜனாதிபதியின் உரிமை.

ஆனால் கடிதம் கிடைத்தது, என்பதற்காகவேனும் பொறுப்புடன் பதில் அனுப்பியிருக்க வேண்டும். அதுதான் ஜனாதிபதியின் கடப்பாடு.

அந்தக் கடப்பாட்டைக் கூட சரிவரச் செய்யாத ஒரு ஜனாதிபதியின் ஆட்சியில் திரியாய் விவசாயிகளின் பிரச்சினையை, இரா.சம்பந்தனின் கடிதம் தீர்த்து விடும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணிக்கு 16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும், அவர்களில் ஒருவர் கூட, தமிழ் பேசும் இனங்களைச் சேர்ந்தவர்களில்லை.

கிழக்கில் தமிழ்பேசும் மக்களே அதிகளவில் வசிக்கிறார்கள். அவர்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகளில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்யும் ஒரு செயலணியில் ஒரு தமிழ்பேசும் பிரதிநிதி கூட இல்லை என்பது மிகமோசமான இனஒதுக்கல் செயற்பாடு.

இந்தக் குறைபாடு குறித்து அரசாங்கத்துக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும், இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஊடக ஆசிரியர்களுடனான ஒரு சந்திப்பின் போது, பொருத்தமான தமிழ்ப் பிரதிநிதிகளை தேடிக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.

தாம் இந்த விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், பொருத்தமான தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியுமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அறிக்கை வெளியிட்டும் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.

ஆனாலும், இன்னமும் இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

முதலில் 11 பேருடன் உருவாக்கப்பட்ட செயலணியில், 12 ஆவது ஆளாக, சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் சேர்க்கப்பட்டார்.

அதற்குப் பின்னர், அண்மையில் அஸ்கிரி, மல்வத்த பீடங்களைச் சேர்ந்த நான்கு பௌத்த பிக்குகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும், இதுவரை ஒரு தமிழ்ப் பிரதிநிதியாவது உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தச் செயலணிக்குப் பொருத்தமான தமிழ், முஸ்லிம் பிரதிநிதி எவரும் கிடைக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்றிருக்கும் அமைச்சருக்கு, மூன்று மாதங்களாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஒரு தகுதியான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியாமல் இருக்கிறது என்பது வேடிக்கையாக உள்ளது.

முன்னர் அதிகளவில் கல்விமான்கள் இருந்தனர் என்றும், தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக் கொண்டவர்கள் அவர்களை கொன்று விட்டதாலும்,  வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாலும் தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா காரணமும் கூறியிருக்கிறார்.

நாய்க்கு எங்கு அடித்தாலும் காலை தூக்கிக் கொண்டு ஓடுவது போல, டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதற்கெடுத்தாலும், புலிகளின் மீது பழியைப் போடுவதே வழக்கமாகி விட்டது.

புலிகள் சுட்டுத் தள்ளியதால் தான் தகுதியான எவரும் கிடைக்கவில்லை என்று அவர் இந்தப் பிரச்சினையில் இருந்து நழுவ முனைகிறார்.

வடக்கிலும், கிழக்கிலும் பல வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அக்கறை கொண்ட புலமையாளர்கள், கல்விமான்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்கள் எவரும் அமைச்சரின் கண்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

எவ்வாறாயினும், அமைச்சர் டக்ளசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன், அந்தச் செயலணியில் இடம்பெறத் தான் தயார் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

வரலாற்றுத்துறையிலோ, தொல்பொருள் துறையிலோ அவர் பாண்டித்தியம் பெற்றவரில்லைத் தான். அதனை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

ஆனால், ஏற்கனவே, தொல்பொருள் துறையை சாராத- மகப்பேற்றியல் மருத்துவ நிபுணரான கபில குணவர்த்தன உள்ளிட்டவர்கள் செயலணியில் இடம்பெற்றிருக்கும் போது, சமுதாய மருத்துவ நிபுணரான தனக்கும் அந்த தகுதி இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்.

எனினும், அவரது இந்த அறிவிப்புக்கு இன்னமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரப்பில் இருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

பொருத்தமானவர்கள் கிடைக்கவில்லை என்பது தான், இங்குள்ள பிரச்சினையா? என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால், இந்த செயலணிக்கான உறுப்பினர்களை நியமிக்கும் போது, ஒரு தமிழ் பிரதிநிதியையாவது உள்ளடக்க வேண்டும் என்ற எண்ணம், ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ வந்திருக்கவில்லை.

தமிழ்க் கட்சிகள் நினைவுபடுத்தியும் அந்த எண்ணம் வரவில்லை.

டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் கோரிக்கை விடுத்த பின்னரும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பு வரவில்லை.

இதிலிருந்து, செயலணியில் தமிழர்களுக்கு இடமில்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு என்று தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

நியமனங்கள் விடயத்தில் நன்கு ஆலோசித்தே முடிவெடுக்கப்படுகிறது என்றும் அதில் யாரும் தலையீடு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

கிழக்கு தொல்பொருள் செயலணிக்கும் அந்தக் கருத்து பொருத்தமானதாக இருக்கலாம்.

மனமிருந்தால் இடமுண்டு. செயலணியில் தமிழர்களுக்கு இடமளிக்கும் மனம் அரசதரப்புக்கு இருந்திருந்தால் இதனை எப்போதோ செய்திருக்கலாம்.

ஆனால் அந்த எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை. 

அதனால் தான் சம்பந்தனுக்கும் ஜனாதிபதியினால் பதில் அனுப்பமுடியவில்லை. மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதனுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பதிலளிக்க முடியவில்லை.

மருத்துவர் முரளி வல்லிபுரநாதனை அல்ல, யாரை பிரேரித்தாலும், அந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம் தான்.

இவ்வளவு தான் அரசுடன் இணைந்துள்ள தமிழ்ப் பிரதிநிதிகளின் பலம்.

தனக்கு இன்னும் சில ஆசனங்களை தந்து பலப்படுத்தியிருந்தால் அதனை சாதிப்பேன், இதனை செய்து முடித்திருப்பேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறிக் கொள்வார்.

அதுவும், கூடுதல் ஆசனங்களைத் தராத மக்களின் மீது பழியைப் போட்டு தப்பிக்கும் உத்தி தான்.

தங்களின் பொறுப்பை இன்னொருவரின் மீது போட்டு தப்பிக்கின்ற முயற்சி இது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04