-என்.கண்ணன்

பொதுத்தேர்தலில், வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட எந்த தமிழ்க் கட்சிக்குமே, எதிர்பார்த்தளவுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை.

20 ஆசனங்களை எதிர்பார்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெறும் 10 ஆசனங்கள் தான் கிடைத்தன.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி குறைந்தது ஆறு  அல்லது ஏழு ஆசனங்களை எதிர்பார்த்த்து. கிடைத்த்து ஒன்று தான்.

யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களை எதிர்பார்த்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு, ஒரே ஒரு ஆசனமும், தேசியப் பட்டியல் ஆசனமும் தான் கிடைத்தது.

ஈபிடிபியும் யாழ்ப்பாணத்தில், 3 ஆசனங்களை எதிர்பார்த்தது. ஒன்றுதான் கிடைத்தது. அதற்கு, எதிர்பாராமல் வன்னியில் ஒன்று கிடைத்திருக்கிறது.

அம்பாறையில் கருணாவுக்கும் ஆசனம் கிடைக்கவில்லை. மட்டக்களப்பில் பிள்ளையானின் ஒரு ஆசனம் தான் கிடைத்தது.

ஒட்டுமொத்தத்தில், தமிழ்க் கட்சிகள், அவை எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்தளவு ஆசனங்களையே பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதிலிருந்து, தமிழ் மக்களை தமிழ்க் கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. 

தமது பலத்தையும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் சரியாக கணித்துக் கொள்வதில், தமிழ்க் கட்சிகள் மத்தியில் குழப்பம் இருந்து வருகிறது.

அதனால் தான், அவர்களால் மக்களின் மனநிலையையும், எவ்வளவு வாக்குகளை, எவ்வளவு ஆசனங்களைப் பெறமுடியும் என்பதையும் சரியாக கணிப்பிட முடியாத நிலை இருந்திருக்கிறது. இந்தநிலை இப்போதும் தொடர்கிறது. இனியும் தொடரப்போகிறது.

பெயருக்கு அரசியல் கட்சிகளை உருவாக்கி நடத்துவதை விட, தம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஆதரவு, அல்லது ஏமாற்றம் குறித்து சரியான கணிப்பிடக் கூடிய கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறான நிலைமை தான், கட்சிகளை தோல்விகள் அல்லது ஏமாற்றங்களில் இருந்து மீள்வதற்கு வழிவகுக்கும்.

பின்னடைவுகள் குறித்த மீளாய்வுகளின் மூலம் தான், அடுத்தமுறை வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

எல்லாக் கட்சிகளாலும் வெற்றிபெற விட முடியாது. அவை எதிர்பார்க்கும் ஆசனங்களையும் பெறமுடியாது,

வரையறுக்கப்பட்ட ஆசனங்களுக்காக நடக்கும்  போட்டிதான் இது. இதில் யார் முந்திக் கொண்டு ஓடுகிறார்களோ அவர்களால் தான் வெற்றியைப் பெறமுடியும்.

எல்லோராலும் வெற்றியைப் பெற முடியாவிடினும், வெற்றிக்கான முயற்சிகளில் ஈடுபட்டு அதற்கான அடித்தளத்தை எல்லாக் கட்சிகளும் அமைத்தேயாக வேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயற்படுகின்றன என்ற கேள்வி இருக்கிறது.

அதுபற்றிய விவாதங்களுக்குச் செல்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல.

தோல்வி மற்றும் பின்னடைவுக்கான காரணங்களை சரியாகப் பகுப்பாய்வு செய்யும், அதற்கான காரணிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கைளை எடுக்கும் தரப்பினால் தான், அடுத்தடுத்த வெற்றிகளைச் சாத்தியப்படுத்த முடியும்.

தாம் எதிர்பார்த்த ஆசனங்கள் கிடைக்காமல் போனதற்கு அல்லது, பின்னடைவுக்கு காரணமான விடயங்களை, அடையாளம் காண்பதில் அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன என்ற கேள்வி உள்ளது.

கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு செவ்வி வழங்கியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப போனதே அவர்களின் தோல்விக்குக் காரணம் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒருவகையில் இந்தக் காரணம் சரியானது. 

இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்த அவருக்கு, தமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆசனங்கள் கிடைக்காமல் போனது, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த பின்னடைவுக்கான காரணத்தை கண்டவதில் குழப்பம் உள்ளதை, அந்தச் செவ்வியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கைவிட்டதால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு, தமிழ் மக்கள் தேசியக் கட்சிக்கும், அதன் பதிலிக் கட்சிக்கும், வாக்களித்திருக்கிறார்கள் என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி தான், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி ஆகியவற்றுக்கு மக்கள் வாக்களிக்கத் தூண்டியது என்பதே அவரது நியாயம். இது தவறான காரணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் எதிர்பார்ப்புக்கேற்க செயற்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்துத் தான், மாற்று அணி என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் தனிவழிப் பயணத்தை தொடங்கினர்.

அவ்வாறாயின், கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்ட வாக்குகள், மாற்று அணிக்குத் தான் கிடைத்திருக்க வேண்டுமே தவிர, பேரினவாதக் கட்சி அல்லது அதன் பதிலி கட்சியின் பக்கம் சென்றிருக்க முடியாது.

சுயநிர்ணய உரிமையை விரும்புகின்ற மக்கள் ஒருபோதும், பேரினவாதக் கட்சிகளின் பக்கம் திரும்பக் கூடியவர்களாக இருக்கமாட்டார்கள். விக்னேஸ்வரன் பழியை முழுமையாக கூட்டமைப்பின் மீது சுமத்தி தப்பிக்க முனைகிறார்.

இன்னொரு பக்கம் அவர், இந்தநிலை தற்காலிகமானது தான் என்று கூறி, உண்மையான காரணத்தில் இருந்து ஒதுங்க முனைகிறார். பேரினவாதக் கட்சிக்கும், அதன் பதிலிக் கட்சிக்கும் ஆசனங்கள் கிடைத்தமைக்கு முக்கிய காரணம், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மை. 

தனித்தனியாகப் போட்டியிட்டு, வாக்குகளைப் பங்கு போட்டுக் கொண்டதால், வந்த நிலை இது.அதனை அவர் ஏற்கத் தயாராக இல்லை.

மேலும், அபிவிருத்தி, சலுகை அரசியலுக்குப் பின்னாலுள்ள காரணத்தையும் அவர் மறந்து போயிருக்கிறார். போர் முடிந்து, 11 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்ச் சமூகத்தில் வேலையின்மை, வறுமை, உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியுள்ளதன் விளைவும் கூட,  தேசியக் கட்சிகள் மற்றும் அவற்றின் பதிலிகளின் வெற்றிக்குக் காரணம் என்பதை உணர மறுக்கிறார் விக்னேஸ்வரன்.

அவர் அரசியல் பிரச்சினைக்கே முதலிடம் கொடுக்கிறார். பொருளாதார, சமூக விடயங்களை அடுத்தடுத்த நிலையில் தான் பார்க்கிறார்.

ஆனால், இளம் சமூகம், அரசியல் பிரச்சினையை விட சமூக, பொருளாதார பிரச்சினைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இது கண்ணுக்குத் தெரியவில்லை.

அரசியல் பிரச்சினைகளை தீர்த்து விட்டுத் தான், பொருளாதார, சமூக பிரச்சினைகளை கவனிப்பதென்றால், தமிழ்ச் சமூகம், ஒருபோதும் முன்னேற முடியாது.

செல்வநாயகம் காலத்தில் தொடங்கிய பிரச்சினை இது. அதற்குப் பின்னர் அமிர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலம், என்று நீண்டு சம்பந்தன், விக்னேஸ்வரன் காலம் வரை தொடருகிறது. 

இந்தப் பிரச்சினை, இவர்களின் காலத்துடன் முடிந்து விடப் போவதுமில்லை. எனவே, பொருளாதார, சமூக விடயங்களிலும் இப்போதே கவனம் செலுத்தியாக வேண்டும். 

தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்தப் பக்கத்தை கவனிக்கத் தவறியுள்ளன. அதனை பேரினவாதக் கட்சிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த யதார்த்தச் சூழலை புரிந்து கொள்ளாமல், தமிழ்த் தேசியக் கட்சிகளால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று விட முடியாது.

பேரினவாதக் கட்சிகள் மற்றும் அதன் பதிலிகளின் பக்கம் திரும்பிய வாக்குகள், தற்காலிகமானவை என்று கணக்குப் போட்டுவிடக் கூடாது.

யாழ்ப்பாணத்தில், ஐதேக கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆசனத்தை பெற்று வந்திருக்கிறது. ஈபிடிபி 1994இற்குப் பின்னர், குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தையாவது தக்கவைத்துக் கொள்கிறது.

எனவே, இந்த திரும்பலை தற்காலிகமானது என்று சமாளித்துக் கொள்வதை விட, இதுபோன்ற நிலைமைக்கான காரணத்தை உணர்ந்து செயற்படுவதே முக்கியமானது.

மேலும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்வி ஒன்றுக்கு விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மீதான அரசாங்கத்தின் நெருக்கடிகள் அதிகரிக்கும் போது, ஒற்றுமை தானாகவே வரும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை தீர்மானிப்பது அரசாங்கம் தான். அதன் நெருக்கடிகள் தான் ஒற்றுமையை தீர்மானிக்கப் போகிறது என்பதே இதன் பொருள். நெருக்கடிகளில் இருந்து தான், ஒற்றுமை பிறக்கும் என்பது சரியே.

ஆனால், தமிழரின் ஒற்றுமையை தமிழர்கள் தீர்மானிக்க முடியாதவர்களாக இருப்பது, தமிழரை அடக்க முனையும் சக்திகளே தீர்மானிப்பது என்பது அபத்தமான நிலைப்பாடு.

அவ்வாறாயின் தமிழ்த் தலைவர்களை சுயசிந்தனையற்றவர்கள் என்றல்லவா கருத வேண்டும்?