-ஆர்.எம்.சஹாப்தீன் -

பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் சார்பில் தொடர்ச்சியாக சுமார் 20இற்கும் குறையாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றார்கள். தற்போதைய பாராளுமன்றத்திலும் 20 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாத போதிலும், முஸ்லிம்களின் அரசியல் தொடர்ச்சியாக பலவீனமடைந்து கொண்டு செல்வதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. அது பற்றி முஸ்லிம் புத்திஜீவிகள் கவலை கொள்வதாகவுமில்லை. முஸ்லிம்களின் அரசியல் பலம் எடுப்பார் கைப்பிள்ளை நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்த முஸ்லிம்களின் அரசியல் பலம் தலை கீழாக மாறியுள்ளது. முஸ்லிம்களின் அரசியல் பலவீனமடைந்துள்ளமைக்கு முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும்தான் காரணமாகும். 

ஆட்சியாளர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்குரிய பேரங்களை பேசாது, அமைச்சர்கள் பதவிகள், திணைக்களத் தலைவர்கள் முதலான பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பேரம் பேசுதல்களையே முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மேற்கொண்டு வந்துள்ளார்கள். அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட போட்டி நிலையினாலும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிச் சண்டையினாலுமே முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக உடைந்தமைக்கு காரணமாகும். மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இருந்த பலரும் தங்களை தலைவர்கள் என்றே கற்பனை செய்து கொண்டார்கள். இதனால், தலைவர் பதவிக்காகவும் முரண்பட்டுக் கொண்டார்கள்.

இவ்வாறு தோன்றிய பிரச்சினைகளினால் முஸ்லிம்களிடையே பல கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன. இக்கட்சிகள் யாவும் சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பணத்திற்கும், பதவிக்கும் அலையும் தலைவர்கள்தான் முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பல இன்னல்களை பௌத்த இனவாதிகளினால் அனுபவித்துள்ளார்கள். 

ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்பட்டுள்ளார்கள். பௌத்த இனவாதிகளை போஷிக்கும் நிலைப்பாட்டிலேயே ஆட்சியாளர்கள் செயற்பட்டுள்ளார்கள். ஆட்சியாளர்களின் அனுசரணையுடனேயே பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. என்றாலும், முஸ்லிம் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஆட்சியாளர்களின் மனம் நோகாத படியே நடந்து கொண்டார்கள்.

இன்று நாட்டில் பௌத்த இனவாத அமைப்புக்கள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களின் கலை, கலாசாரம், உணவுப் பழக்கம், மதவிழும்மியங்களுக்கு எதிராக பேசுவதன் மூலமாக பௌத்த சிங்கள மக்களின் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகபட்ச இனவாதக் கருத்துக்கள் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கையை பேரினவாதக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளன.

பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினது ஆதரவுடன் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்றுள்ளது. 19வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. 20வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதி மீண்டும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள இருக்கின்றார்.

இதே வேளை, தேர்தல் காலங்களில் சற்று அமைதியடைந்து இருந்த பௌத்த இனவாதத் தேரர்கள் தங்களின் இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசாரத் தேரர் இலங்கை உலமாக சபைக்கு சீல் வைத்து, அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாயக்கல்லி விகாரைக்கு அருகில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை தந்து உதவுமாறும், அக்காணிகளுக்கு வேறு இடங்களில் மாற்றுக் காணிகள் வழங்குமாறும் பௌத்த பிக்குகள் குழுவொன்று இறக்காமம் பிரதேச செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாடுகளை இறைச்சியாக அறுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பிரேரணை ஒன்றினை முன் வைத்துள்ளார். இதற்கு ஆளுந் தரப்பினர் ஆதரவு வழங்கியுள்ளார்கள். மாடுகளை அறுப்பதனை தடை செய்வது பற்றிய இறுதித் தீர்மானம் எடுப்பதனை அரசாங்கம் ஒரு மாதத்திற்கு பிற்போட்டுள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புகவெல தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயங்களை கவனத்திற் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் நடைமுறையை இன்னும் வலுவாக்கிக் கொள்வதற்கு பேரினவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள்.

Sri Lanka Muslims brave militant threats for Friday prayers | WTOP

இதனால், முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுக்காது, பக்குவமாக செயற்பட வேண்டும். மாயக்கல்லி விகாரைக்கு முஸ்லிம்களின் வளமிக்க வயற்காணிகளை தருமாறு கேட்கும் கோரிக்கையாக இருக்கலாம், உலமா சபையின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையாக இருக்கலாம், உணவுக்காக மாடுகளை அறுப்பதனை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையாக இருக்கலாம் இதில் எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை மிகவும் கவனத்துடன் வெளிக்காட்ட வேண்டும்.

மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பௌத்த இனவாதத் தேரர்கள் நீண்ட காலமாக கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மாடுகளை இறைச்சிக்காக கொல்வதாகவும், வதை செய்வதாகவும் தெரிவிக்கின்றார்கள். ஆனால், உணவுத் தேவைக்காக ஆடு, பன்றி, கோழி போன்றன கொல்லப்படுகின்றன. மாடுகளை கொல்வது மிருகவதை என்று குரல் கொடுப்பவர்கள் ஆடு, பன்றி போன்றனவும் மிருகவதைக்கு உட்படுவதாக தெரிவிப்பதில்லை. அவற்றினை அறுப்பதற்கு தடைகளை விதிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை கோருவதுமில்லை. ஆதலால், அடிப்படையில் மாடுகளை அறுப்பதற்கு தடையை ஏற்படுத்த வேண்டுமென்பதில் உள்நோக்கங்கள் உள்ளமையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் மாத்திரமின்றி ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்களில் பலரும் உணவாகக் கொள்கின்றார்கள். அதனால், மாடு அறுப்பதற்கு தடைகள் போடப்பட்டால் அதற்கு எதிராக முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை. மாடு அறுக்கும் விவகாரத்தில் இந்தியாவில் இனவாதிகள் பல கொடுமைகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகையதொரு சூழலை முஸ்லிம்கள் இலங்கையில் ஏற்படுத்தும் விதமாக உணர்ச்சிகளுக்குட்பட்டு செயற்படக் கூடாது. அத்தகையதொரு சூழலை உருவாக்க இனவாதிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அவதானிக்கும் போது, வேண்டுமென்று பிரச்சினைகளை உருவாக்கி, அதனை முஸ்லிம்களின் மீது சுமத்தி குழப்பங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தமையை கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இன்று முஸ்லிம்களில் பலர் மாட்டிறைச்சியை தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். ஆடு, கோழி ஆகியவற்றின் இறைச்சியை உணவுக்காக பயன்படுத்தும் வீதம் அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. அதே வேளை, மாட்டிறைச்சியை உணவுக்காக பயன்படுத்தும் முஸ்லிம் அல்லாதவர்களின் தொகையில் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன.

மேலும், மாடு அறுப்பதற்கு தடைகளை ஏற்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்காலத்திற் சந்திக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். அதாவது, இன்று நாட்டில் மாடுகளை வளர்க்கும் பெரிய பண்ணைகளை சிங்களவர்களே வைத்துள்ளார்கள். அத்தோடு, முஸ்லிம்களை விடவும் தமிழ், சிங்கள மக்களே மாடுகளை அதிகமாக வளர்க்கின்றார்கள். இவர்கள் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே இதனை மேற்கொள்கின்றார்கள். பசுக்களை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பால் தரும் தகுதியை இழக்கின்றன. இதனால், அந்த பசுக்களில் இருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. மேலும், அந்த பசுக்கள் இறக்கும் வரை வருமானமின்றி பராமரிக்க வேண்டும். மேலும், மாடுகளை அறுப்பதற்கு தடைகளை ஏற்படுத்தும் போது அவற்றின் இனப் பெருக்கம் அதிகரிக்கும். இதனால், அதனை பராமரிப்பதற்கு தண்ணீர், உணவு போன்றவற்றிக்கு தட்டுப்பாடுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் ஏற்படுமென்று சுட்டிக் காட்டப்படுகின்றன.

இந்தியாவில் இந்துத்துவ இனவாதிகள் மாடு அறுப்பதற்கு தடைகளை ஏற்படுத்த வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மாட்டிறைச்சி உண்பர்களைக் கூட அடித்து கொலை செய்துள்ளார்கள். இவ்வாறு பல்வேறு துன்பங்களை இறைச்சிக்காக மாடு அறுக்கும் விடயத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்றார்கள். அதே வேளை, இந்தியா மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றது. மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தை பெற வேண்டுமென்று இந்தியா போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது. மாட்டிறைச்சி உற்பத்தியில் ஆத்திரேலியா, பிரேஸில், சீனா, ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இந்நாடுகள் போட்டி அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாட்டுப்பால் உற்பத்தியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேஸில், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, துருக்கி, பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் முன்னணி வகிக்கின்றன. பால் உற்பத்திக்கு உதவாத பசுக்களை இறைச்சிக்காக பயன்படுத்துகின்றார்கள். ஆதலால், இலங்கை அரசாங்கம் மாடுகளின் மூலமாக தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கும், தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் கவனம் செலுத்த வேண்டும்.

அதனைவிடுத்து மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் போது வதைக்குள்ளாக்கப்படுகின்றது என்று சொல்லுவதில் வேறு நோக்கங்களே உள்ளன. மிருகவதை என்று வாதிடும் போது அதனை தனியே மாடுகளுக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது. இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் பன்றி, ஆடு, கோழி, மீன் வகைகள் ஆகியவற்றினையும் உணவுக்காக அறுப்பதற்கு தடைகளை போட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அதில் பொதுத்தன்மையும், நீதியும் இருப்பதனை உணர முடியும்.  

முஸ்லிம்களின் மதவிழுமியங்கள், ஹலால் உணவு, கலாசாரம் ஆகியவற்றில் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுத்தி, முஸ்லிம்களை அதன்பால் கிளர்ந்தெழச் செய்து அரசியல் செய்யும் முறைமையொன்று இலங்கையில் பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு, பௌத்த இனவாதத் தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, முஸ்லிம்களை தேசத் துரோகிகள், இரக்கமற்றவர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய பிரச்சாரம் சிங்கள மக்களிடையே பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

பௌத்த இனவாத அமைப்புக்கள் தங்களின் இத்தகைய பிரச்சாரத்தை தேசப்பற்று என்று காட்டிக் கொண்டு, நாட்டில் இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை குழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாத அமைப்புக்கள் தேசப்பற்றாளர்கள் என்று காட்டிக் கொண்டு ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன. இதனால், இந்த அமைப்புக்களை மீறிச் செயற்பட முடியாத நிலைக்கு பேரினவாதக் கட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறியுள்ளார்கள். பௌத்த இனவாத அமைப்புக்களை போஷிக்க வேண்டிய அரசியல் தேவையும் பேரினவாதக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளன.

பௌத்த தேரர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக முன் வைத்துக் கொண்டிருக்கும் எந்தவொரு கருத்திற்கு எதிராகவும் ஆட்சியாளர்கள் வாய்திறக்க முடியாதவர்களாக உள்ளார்கள். சிறுபான்மையினர் வாடகை வீட்டில் வசிக்கின்றீர்கள் என்பதனை மறக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாத தேரர்கள் கட்டுப்படுத்த முடியாத பொலிஸ்காரர்களைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சட்டமும், ஒழுங்கும் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளாகவே இருக்கின்றன.

ஆதலால், முஸ்லிம்கள் இலங்கையில் உள்ள இந்த சூழலை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். நீதிமன்றங்களின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலமாகவும், பௌத்த பீடாதிபதிகளுடன் பேசுவதன் மூலமாகவும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் எங்களின் உரிமை, மதச் சுதந்திரம் என்று வீதியில் இறங்கி போராடினால், அந்தப் போராட்டம் பௌத்த இனவாதிகளுக்கு அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும். 

மாடு அறுப்பதற்கு தடை என்றால் அதனை முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்காது, மாட்டிறைச்சி உண்பவர்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். மாடு உற்பத்தியாளர்களின் பிரச்சினையாக அதனை கையாள வேண்டும். இலங்கையில் மொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் முஸ்லிம்கள் 40 வீதமாகவும், ஏனையவர்கள் 60 வீதமாகவும் உணவாகக் கொள்கின்றார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதலால், முஸ்லிம்கள் இந்த விவகாரத்தை புத்திசாதுரியமாக கையாள வேண்டும். பௌத்த இனவாத அமைப்புக்களை திருப்திப்படுத்தவும், அதன் மூலமாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவும் எடுக்கப்படும் முயற்சியில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளாது செயற்பட வேண்டும்.