அஞ்சலில் சேராத கடிதம் - அன்புடன் சந்திரிகா அம்மையாருக்கு,

13 Sep, 2020 | 03:18 PM
image

அன்புடன் சந்திரிகா அம்மையாருக்கு, 

      சுதந்திரக்கட்சியின் பரிதாபநிலை குறித்து அண்மையில் கவலையுடன் நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்குப் பிறகு இதை எழுதுகிறேன். 

      பெருமைக்குரிய தந்தை பண்டாரநாயக்கவினால் தாபிக்கப்பட்டு, அவரின் கொலைக்குப் பிறகு தாயாரினாலும் அடுத்து உங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் கதி குறித்த கவலை புரிந்துகொள்ளக்கூடியதே. தந்தை குடும்ப ஆதிக்கத்தைக் கொண்டுவர கட்சியொன்றை அமைக்க முற்பட்டிருக்கக்கூடியவரே அல்ல. சுதந்திரக் கட்சியை 1951 இல் அவர் ஆரம்பித்தபோது இலங்கையின் முதல் பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் தான் இருந்தால் நாட்டின் தலைவராகக்கூடிய வாய்ப்பு தனக்கு ஒருபோதும் கிடைக்காது என்று அவர் நினைத்திருக்கக்கூடும். 

      அந்த நினைப்பும் சுதந்திரக்கட்சியின் தோற்றத்திற்கு ஒரு காரணியாக இருந்தது. ஆனால், அவர் புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவிக்க வேறு அரசியல் - சமூக காரணிகளும் இருந்தன. கட்சியை ஆரம்பித்து குறுகிய 5 வருடங்களில் ஆட்சிக்கு வருவதற்கு அந்த காரணிகளே பிரதான இயக்கவிசையாக இருந்தன. 

      1956 தேர்தலில் தந்தை தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றி இலங்கையின் அன்றைய அண்மைக்கால வரலாற்றில் ஒரு எல்லைக்கோடாகும். ஐ.தே.க படுதோல்வி அடைந்தபோது தந்தையை விடவும் இடதுசாரித்தலைவர்களே கூடுதலாகக் குதூகலமடைந்தார்கள். கொல்வின் ஆர்.டி.சில்வா, 'ஐ.தே.க.வின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடித்தாகிவிட்டது" என்றார். அதே பெட்டிக்குள்ளிருந்து சடலம் எழும்பிவந்து மீண்டும் பல தடவைகள் ஆட்சி செய்தது என்பது வேறு கதை. 

      தந்தையின் கொலைக்குப் பிறகு கட்சிக்குள் இருந்த அனுபவமும் புலமையும் மிக்க வேறு தலைவர்களைத் தலைமைக்கு வரவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்த அரசியல் அதிகார மேல்நிலை வர்க்கம் தந்தை அரசியலுக்குக் கொண்டுவருவது குறித்து நினைத்தே பார்த்திருக்க முடியாத தாயாரை அரசியலுக்குக் கொண்டுவந்தது. உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையையும் தாயார் பெற்றார்.

      அதன்பிறகு தான் சுதந்திரக்கட்சி பண்டாரநாயக்காக்களின் குடும்பச்சொத்தாக மாறியது. உங்கள் தாயாருக்குப் பிறகு நீங்கள் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்து, கட்டியெழுப்பி தேர்தல்களில் பெருவெற்றி பெற்று இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் பெருமைபெற்றீர்கள். 

      1977 பொதுத்தேர்தலில் ஜே.ஆர் தலைமையில் பிரமாண்டமான பெரும்பான்மையுடன் ஐ.தே.க ஆட்சிக்கு வந்தபிறகு உங்கள் கட்சி எதிர்நோக்கிய நெருக்கடிகள் மீண்டும் அது தலையெடுத்து அதிகாரத்திற்கு வருமா என்ற கேள்வியைக் கிளப்பின. தாயாரின் குடியுரிமையைக் கூட ஜெயவர்தன அரசாங்கம் பறித்தது. பின்னர் குடியுரிமை மீண்டும் கையளிக்கப்பட்ட போதிலும் கூட, கொடூரமும் சூழ்ச்சியும் நிறைந்த அந்த ஆட்சியின் கீழான பாதிப்புக்களிலிருந்து கட்சியை மீட்டெடுக்க தாயாரால் இயலவேயில்லை. 

      அதற்குப் பிறகுதான் அவர் உங்களை முன்னணிக்குக் கொண்டுவந்து கட்சியைப் பழையநிலைக்கு மீள்வித்து, ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது.  ஐ.தே.க.வை கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்தது. உங்களுக்குப் பிறகு மஹிந்த ஜனாதிபதியாக வந்து கட்சித்தலைமைப் பதவியையும் பொறுப்பேற்ற போதிலும், ஐ.தே.க.வை அதன் வலுவான நிலையிலிருந்து வீழ்த்தமுடியாது என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்து தொடர்ச்சியான வெற்றிக்கு அடித்தளமிட்டவர் நீங்கள்தான்.

      தற்போது சுதந்திரக்கட்சியின் 69 ஆவது வருடாந்த தினத்தை முன்னிட்டு சாதனைகளைச் சொல்லிப் பெருமைப்பட முடியாமல் கவலைப்பட வேண்டிய பரிதாபநிலை உங்களுக்கு.

      கட்சியின் இன்றைய நிலைக்கு மஹிந்தவும் சிறிசேனவுமே பொறுப்பு என்று நீங்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்ற போதிலும் கூட, உங்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது. அதை ஒத்துக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குப் பக்குவம் இருக்கிறது. நீங்கள் செய்த காரியங்களினால் மாத்திரமல்ல, செய்யத்தவறிய காரியங்களாலும் கட்சிக்கு இந்த நிலை என்று கூறியிருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் விளக்கிக் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோருக்கும் அது தெரியும்.

      தந்தைக்குப் பிறகு கட்சியைப் பொறுப்பெடுக்க தாயார் இருந்தார். அவர் உயிருடன் இருந்த வேளையிலேயே பொறுப்பை உங்களிடம் கொடுக்கவேண்டிய தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. தந்தை உங்களைத் தனது 'அரசியல் புத்திரி" என்று சிறுபராயத்தில் வர்ணித்த போதிலும்கூட, தாயார் தம்பி அநுரவை குடும்பத்தின் அரசியல்வாரிசாக அரியாசனத்தில் அமர்த்தும் கனவையே கொண்டிருந்தார். ஆனால் தம்பியோ அதற்குப் பொருத்தமானவராகத் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தின் வாரிசு என்றால் இயல்பாகவே ஒருநாள் ஆட்சி தன்கைக்கு வரும் என்று கனவு கண்டுகொண்டு சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தார் அநுர. அவர் ஆங்கிலப்புலமை மிக்க சிறந்த பாராளுமன்ற விவாதி. தந்தையின் மரபு அவரிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அரசியல் சாதுரியம் பூச்சியம்.

      நேரு, பூட்டோ குடும்பங்களுடன் தனது பெற்றோருக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிப் பெருமைபேசி 'நேருவின் மடியில் இருந்து பழகிய சிறுவன் நான்" என்று பெருமிதத்தில் மிதந்துகொண்டிருந்தார். தாயார் தலைமையில் கட்சி படுமோசமான நெருக்கடியை எதிர்நோக்கிய வேளையில் ஐ.தே.க.வுக்கு தாவியபோது அநுர பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் தனது தந்தையார் முதலில் அங்கம் வகித்த கட்சிக்கே திரும்பி வந்ததாகக்கூடப் பேசினார் என்றால் பாருங்களேன். தந்தை உருவாக்கிய கட்சியிலிருந்து வெளியேறியதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் என்றோ அங்கம் வகித்த கட்சிக்குச் சென்றதாகக்கூறி, தனது கட்சித்தாவலை நியாயப்படுத்திய விளையாட்டுப்பிள்ளை அவர்.

      நீங்களும் கூட தாயார் நெருக்கடியை எதிர்நோக்கிக்கொண்டிருந்த வேளையில், 1984 ஆம் ஆண்டில் சுதந்திரக்கட்சியைவிட்டு கணவர் விஜயவுடன் வெளியேறி புதிய கட்சியை அமைத்தவர் தான். ஆனால் திரும்பிவந்து சுதந்திரக்கட்சிக்குப் புத்துயிர் கொடுத்து ஆட்சிக்கு வந்து தாயாரை அவரது அந்திமக்காலத்தில் மீண்டும் பிரதமராக்கினீர்கள். அதன்மூலம் பாவப்பரிகாரத்தைச் செய்துவீட்டீர்கள். 

      குடும்பத்தின் சொத்தாக கட்சியை உறுதிப்படுத்துவதில் நீங்கள் எல்லோரும் கவனம் செலுத்தினீர்களே தவிர, அடுத்தமட்டத் தலைவர்களை வளர்ப்பதில் ஒருபோதும் அக்கறைகாட்டவில்லை. அதுவும் கட்சியின் இன்றைய நிலைக்கு ஒரு முக்கிய காரணம். கட்சியின் தலைமைத்துவம் என்றாவது ஒருநாள் தனது கைகளுக்கு வருமென்பதில் மஹிந்த நம்பிக்கையுடன்  அமைதியாக தனது வியூகங்களை வகுத்துவந்தார். அவரது எழுச்சியை உங்களால் தடுக்கமுடியவில்லை. தனக்குரிய நேரம் வரும்போது பண்டாரநாயக்க குடும்பத்தவர்கள் தனக்கெதிராக எதையும் செய்யமுடியாத வலுவற்ற நிலையில் இருப்பார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 

      அடுத்தது சிறிசேன ஜனாதிபதியாகிய பிறகு கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த தானாக முன்வந்து அவரிடம் கையளித்ததன் பின்னால் உள்ள சாதுரியமான திட்டம் எதுவென்பதை பொதுஜன பெரமுனவின் அண்மைய இரு தேசிய தேர்தல் வெற்றிகள் பிரகாசமாக வெளிக்காட்டி நிற்கின்றன. 

      ராஜபக்ஷாக்கள் தங்களது குடும்பத்திற்கென்று சொந்தமாகவே தற்பொழுது ஒரு வலுவான கட்சியைக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதான ஆதரவுத்தளம் சுதந்திரக்கட்சிக்கு சொந்தமானதுதான். பண்டாரநாயக்க குடும்பத்தின் மரபு என்று சொல்லக்கூடியதாக எதுவுமே இல்லாமல் போய்விடும் அளவிற்கு கட்சி இன்று முழுமையாக ராஜபக்ஷாக்களுடன் சங்கமித்துவிட்டது.

      இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இரு மிகப்பெரிய அரசியல் கட்சிகள் இன்று அரசியல் அநாமதேயங்களாகப் போய்விடும் பரிதாபநிலை. உங்கள் நண்பர் ரணிலின் ஐ.தே.க.வின் பிரதான ஆதரவுத்தளமும் சஜித் அணிக்குக் புடைபெயர்ந்துவிட்டது. நாட்டின் இரு மிகப்பெரிய பாரம்பரிய அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்று பத்திரிகைகளில் கல்லறை வாசகம் எழுதவும் சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். 

      கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க இளம் தலைமுறையினருடன் பாடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தீர்கள் அம்மையாரே, இளம் தலைமுறையினருக்கு சுதந்திரக்கட்சியோ ஐ.தே.க.வோ தேவைப்படுவதாக நான் நினைக்கவில்லை. வீண்பிரயத்தனத்தில் ஈடுபடாதிருப்பதே விவேகமான செயலாக இருக்கும். வாழ்வின் அந்திம காலத்தை அமைதியாகத் தொடருங்கள். உடல் நலனுக்கும் நல்லது.

இப்படிக்கு,

ஊர்சுற்றி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54