-சதீஷ் கிருஷ்ணபிள்ளை    

அரசியல் அரங்கில் அவ்வப்போது நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறும். எவரும் சிரித்து மகிழலாம். சில நகைச்சுவைத் துணுக்குகள் சிந்தனையைத் தூண்டும். நம்மை நாமே சுயபரிசீலனை செய்யக்கூடிய துணுக்குகளும் உண்டு.

கடந்த வார நகைச்சுவைத் துணுக்கை நோர்வேயைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கூறினார். அந்தத் துணுக்கு டொனல்ட் ட்ரம்பை பற்றியது. அவருக்கு நொபெல் சமாதானப் பரிசை வழங்குவதுடன் தொடர்புடையது.

Donald Trump nominated for the 2021 Nobel Peace Prize | News | DW |  09.09.2020

அடுத்த ஆண்டுக்குரிய நொபெல் சமாதானப் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்ததாக நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்ரியன் டைப்ரிங் ஜெட்டே கூறினார்.

ஒட்டுமொத்த உலகமும் சிரித்தது. ஜெட்டேயின் கருத்தால் சிரித்ததா, அதனால் ட்ரம்ப் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்ததா என்பதை ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமிக்கலாம்.

ட்ரம்பின் பெயரை இலக்கியத்திற்கான நொபெல் பரிசுக்காக பரிந்துரைக்கலாமே, அவர் அவ்வளவு கட்டுக்கதைகளை உருவாக்கியவர். அதனை அபாரமான புனைவுகள் எனலாம். ஏன் சமாதானத்திற்கான நொபெல் பரிசு என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.

இஸ்ரேலுக்கும் அரேபியாவிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த பாடுபட்டாராம். அவரது முயற்சியால் மத்திய கிழக்குப் பிராந்தியம் சமாதான பூமியாக மலரும் சாத்தியம் உள்ளதாம். இவையெல்லாம் ஜெட்டே சொன்ன கதைகள்.

ட்ரம்பின் குடிவரவுக் கொள்கைகளைப் படிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா சென்ற அரசியல்வாதி. முஸ்லிம்கள் முன்கோபிகள் என்று வர்ணித்தவர். இஸ்லாமிய பெண் பிள்ளைகள் அணியும் ஹிஜாப்பை, வெள்ளையின மேலாதிக்க சிந்தனையுடைய கூ க்ளுஸ் கான் (Ku Klux Klan) குழுவினர் அணியும் முக்காடுடன் ஒப்பிட்டுப் பேசியவர்.

இத்தனை சிறப்புகளுக்குரிய ஜெட்டே, சமாதானப் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர் என கூறுவதை எந்த வகையிலான நகைச்சுவைத் துணுக்காக கருதுவது?

பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை அத்துமீறித் தொட்டு பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டவர். பெண்களைக் கேலி செய்தவர்.

வெள்ளையின மேலாதிக்க சிந்தனை கொண்டவர். கறுப்பினத்தவர்களை பகிரங்கமாக விமர்சிப்பவர். கறுப்பர் என்பதற்காக பரக் ஒபாமாவிற்கு பிறப்பு அத்தாட்சப் பத்திரம் உண்டா என்று கேள்வி கேட்டவர்.

அமெரிக்க மண்ணில் வாழும் இஸ்லாமியர்களால் ஆபத்து என்பவர். சில நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருவதைத் தடை செய்தவர். மெக்ஸிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பெருஞ்சுவர் எழுப்ப அரும்பாடு படுபவர்.

தமது சொல்லாலும், செயலாலும், ட்விற்றர் பதவிகளாலும் உலக அரசியலில் பல பிரச்சனைகளைக் கிளப்பியவர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் மத்திய கிழக்கில் இரத்தக்களரிக்கு வழிவகுத்தவர் என்ற உதாரணம் போதுமானது.

கொவிட்-19 விவகாரத்திலும் அப்படித்தான். லைசோலைக் குடித்தால், நுரையீரலில் உள்ள கொரோனா வைரஸ் செத்துப் போய்விடும் என்று சொன்னவர். இதனைத் தெரிந்தே சொன்னாரா, விஞ்ஞானத்தைப் பகிடி செய்வதற்காக கூறினாரா என்று சந்தேகப்பட்டனர்.

எனினும், ட்ரம்ப் பொறுப்பற்றவரே அன்றி, அப்படியொன்றும் முட்டாள் அல்ல என்பதை பொப் வுட்வேர்ட் என்ற செய்தியாளர் நிரூபித்துள்ளார். இவர் வோட்டர்கேட் ஊழலை அம்பலப்படுத்தியவர்.

கடந்த டிசம்பர் மாதம் ட்ரம்பைப் பேட்டி கண்ட சமயம், கொவிட்-19 தொற்றுநோய் எவ்வளவு தீவிரமானது என்பதை அவர் விளக்கியதாக தமது புதிய புத்தகத்தில் வுட்வேர்ட் குறிப்பிட்டிருக்கிறார்.

US President Donald Trump nominated for Nobel Peace Prize by Norwegian  lawmaker | Euronews

இந்தக் கட்டுரை எழுதப்படும் சமயத்தில், அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 198,128 ஐத் தாண்டியிருந்தது.

லைசோல் பற்றிய கட்டுக்கதைகளைக் கூறி தொற்றுநோய் விவகாரத்தில் பொறுப்பற்றவராக நடந்து கொண்ட ட்ரம்ப், இந்த மரணங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டாமா? அவரது பெயரை நொபெல் சமாதானப் பரிசுக்காக பரிந்துரைப்பதா?

இது பரிந்துரைத்தவரின் தவறென ஒட்டுமொத்தமாகக் கூறி விட முடியாது. நொபெல் பரிசுக் குழு கடந்த காலத்தில் வழங்கிய பரிசுகளை ஆராய்ந்தால், ட்ரம்பிற்கு சமாதானப் பரிசு கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நொபெல் பரிசு பீற்றர் ஹென்ட்கே என்ற எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது. இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்.

1990களில் செர்பிய அரசாங்கம் பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்து விட்டபோது, அந்த அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கியவர் என்ற தீவிர விமர்சனம் பீற்றர் ஹென்ட்கேயின் மீது முன்வைக்கப்படுகிறது.

பீட்டர் ஹேண்ட்கே Archives |

அடுத்து பரக் ஒபாமா. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒன்பதே மாதங்களில் நொபெல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.

ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவர். ஆப்கான் போருக்கு முடிவு கட்ட முயற்சி செய்யாமல், போரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு சமாதானப் பரிசா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

2012ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நொபெல் சமாதானப் பரிசு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுந்த விமர்சனங்களையும் நினைவுகூர முடியும்.

பொருளாதார மந்தநிலையின் காரணமாக கிரேக்க மக்கள் வாழ வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த சமயம். அப்போது, கிரேக்கத்தின் மீது பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகித்து, மக்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்திய அமைப்பு.

அது தவிர, மத்திய கிழக்கில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல நாடுகளுக்கு ஐரோப்பிய வல்லரசுகள் ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்வமைப்புக்கு நொபெல் சமாதானப் பரிசு வழங்கப்படுவதில் என்ன நியாயம் என்ற கேள்விகள் எழுந்தன.

நொபெல் பரிசை ஆரம்பித்த அல்பிரெட் நொபல் ஆயுதக் களைவிற்காக பாடுபடுவோரை ஊக்குவிக்க விரும்பினார். எனினும், உலகின் மிகப் பெரிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அவரது பெயரில் சமாதானப் பரிசா என்ற விமர்சனம் முக்கியமானது.

Most controversial Nobel Peace Prize winners of all time — RT World News

1973ஆம் ஆண்டில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹென்ரி கீஸிங்கருக்கும், வடக்கு வியட்நாமின் லே டுக் தோவிற்கும் வழங்கப்பட்ட சமாதானப் பரிசும் அத்தகையதே.

வியட்நாம் யுத்தத்தை முடிவு கட்டும் முயற்சிகளுக்காக சமாதானப் பரிசு வழங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த சமயம், ஹனோய் நகரத்தின் மீது குண்டு போட உத்தரவிட்டவர் தான் ஹென்ரி கீஸிங்கர்.

பரிந்துரைக்கப்பட்டவர்கள் மத்தியில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் நொபெல் கமிட்டி, தவறானவர்களைத் தெரிவு செய்த சந்தர்ப்பங்கள் அனேகம். அது தவிர, பெண்கள் மீதும், ஐரோப்பியவர்கள் அல்லாதவர்கள் மீதும் பாரபட்சம் காட்டுவதை எழுதாத மரபாகக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தில் அதீத காந்த சக்தியைக் கொண்ட ஒருவகை நட்சத்திரங்களைக் கண்டுபிடித்த பௌதீகவியல் ஆய்வாளரான ஜொசெலின் பெல் என்ற பெண்ணுக்கு நொபெல் பரிசு கிடைக்கவில்லை.

ஆனால், ஏழு வருடங்கள் கழித்து, ஜொசலினின் ஆலோசகரான அன்டனி ஹெவிஷ் என்பவருக்கு பரிசு வழங்கப்பட்டது. குறித்த நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் அவரது தீர்க்கமான வகிபாகத்தை அங்கீகரிக்கிறோம் என்று பரிசுக் கமிட்டி நியாயம் பேசியது.

நமக்கு அதிகமாகத் தெரிந்த உதாரணத்தை எடுப்போமோ. மகாத்மா காந்தி. அவரது பெயர் 12 தடவைகள் சமாதானப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது. எனினும், ஒரு தடவையேனும் கிடைக்கவில்லை.

இத்தகைய பித்தலாட்டங்கள் காரணமாகவே நொபெல் பரிசின் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறோம்.

சமகால அமெரிக்க ஜனாதிபதியைப் போலவே சிந்திக்கும் ஒருவர், அவரது பெயரை சமாதானப் பரிசுக்கு பிரேரித்துள்ளாராயின், அதனை நகைச்சுவையாகக் கருதி விட முடியாது.

மாறாக, நொபெல் பரிசளிப்பு முறையின் மீதான நம்பிக்கையீனத்தின் விளைவாகக் கருதி, அதனை மீள்பரிசீலனைச் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயமாகவே பார்க்க வேண்டியதாக இருக்கிறது.