நாட்டின் பல பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

வாரியப்பொல

வாரியப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய - அனுராதபுரம் வீதி, மினுவாங்கொடை எரிபொருள் நிலையத்திற்கருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எரிபொருள் நிலையத்திற்கு செல்வதற்காக வலது புறமாக திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு மோட்டார் சைக்கிள்களிலும் சென்ற மூவரும் படுகாயமடைந்த நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரழந்துள்ளார்.

சக்திகம - மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை

மினுவாங்கொடை - வேயங்கொடை வீதி, விகாரை சந்திக்கருகில் மினுவாங்கொடை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 45 வயதுடைய கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரலங்வில

அரலங்வில - க்ரவேல்கந்த, அளுத்ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலங்வில நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அரலங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிம்புரத்தேவ - அரலங்வில பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனமல்வில

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரகம சந்தி, மீகஹஜந்துர வீதி தேக்கு தோட்டத்திற்கருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீகஹஜந்துர நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் நின்று கொண்டிருந்த மாடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் குமாரகம, சூரியஆர - தனமல்வில பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். மேற்குறித்த விபத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.