(நேர்காணல்:- ஆர்.ராம்)

20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

மக்களின் நிலைப்பாடு

1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஜனநாயகத்தின் உயர் பெறுமானங்களின் வெளிப்பாடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ஆணை பெறப்பட்டு வரப்படுகின்றது. அதேபோன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அவை செயல்வடிவம் பெற்றிருக்கவில்லை.

ஜனாதிபதி தற்துணிவின் பிரகாரம் முன்னெடுக்கும் தீர்மானங்களை பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்துவதற்கான அதிகாரங்கள் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இருந்தாலும் அது செயற்பாட்டு ரீதியாக நடைபெறவில்லை. இதனால் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை  இருக்கவில்லை. 

ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரமுடியாது என்றும் காணப்பட்டது. இதனால் நீதிமன்றத்திற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டியவராக இருக்கவில்லை. சட்டவாக்கத்திற்கும், நீதித்துறைக்கும் பொறுப்புக்கூற வேண்டியவரல்லாத ஒருவராக ஜனாதிபதி காணப்பட்டார். இது ஏதேச்சதிகாரத்திற்கு வித்திட்டது.

அதனைவிடவும், அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் அரசியல் மயமாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. அத்துடன் பதவி நியமனங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கே உட்பட்டிருந்தன. இதனால் நிறைவேற்று அதிகார முறைமையினை முழுமையாக ஒழித்தல் அல்லது மறுசீரமைத்தல் வேண்டும் என்று மக்கள் மத்தியில் பொது நிலைப்பாடொன்று இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக உருவாகியிருந்தது.

நிறைவேற்று அதிகாரமும் சுயாதீன குழுக்களும்

இந்தப் பின்னணியில் தான் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்திருந்த கூட்டு அரசாங்கம் நிறைவேற்ற அதிகாரத்தினை வலுப்படுத்திய 18ஆவது திருத்தச்சட்டத்தினை செயலிழக்கச் செய்யும் வகையில் 19ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொண்டது. ஜனாதிபதியின் நிறைவேற்ற அதிகாரங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. 

ஜனாதிபதி நீதித்துறைக்கு பொறுப்புக்கூறும் வகையில் அவருக்கு எதிராக பதவியில் இருக்கும்போதே அவருடைய தரப்பாக சட்டமா அதிபரை கருதி அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்ய முடியும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நியமனத்தின் போதும், பாராளுமன்றத்தினை கலைக்கும்போதும் பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் மாற்றியமைக்கப்பட்டது. 

பிரதமரும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு சுயாதீன ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களைச் செய்வதற்கு அரசியல் பிரதிநிதிகள், சிவில் தரப்புக்களை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சபையினால் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டது. 

புரியாத புதிர்பு

இவ்வாறு பல்வேறு ஜனநாயக குணாம்சங்கள் நிறைந்த 19ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றும்போது தற்போதை உறுப்பினர்கள் பலர் அன்று ஆதரவளித்திருந்தார்கள். ஆனால் 19ஐ செயலிழக்க செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தச்சட்டத்திற்கும் அந்த உறுப்பினர்களே ஆதரவாக இருக்கின்றார்கள். 

அன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும் பேதங்களை மறந்து பரந்துபட்ட ஜனநாயகத்தினை விரும்பியவர்களாக ஆதரவளித்தார்கள். ஆனால் அந்த உறுப்பினர்களே தற்போது நேர் எதிராக இருக்கின்ற அதாவது அதிகாரக் குவிப்பினை செய்ய விளையும் சட்டதிருத்தத்திற்கு எந்த அடிப்படையில் ஆதரவளிக்கின்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. 

20ஆவது திருத்தத்தின் பிராகாரம், ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரமுடியாது, தற்துணிவின் பிரகாரம் தீர்மானங்களை எடுக்க முடியும், அரசியலமைப்பு சபைக்கு பதிலாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை நியமனங்களுக்கான அவதானிப்புக்களை வழங்க, இறுதி தீர்மானங்களை ஜனாதிபதி எடுக்க வல்லவராக இருத்தல் உட்பட ஜனாதிபதி முறைமை மீண்டும் பழைய நிலைமைக்கே செல்கின்றது. இதனால்  தனி நபருக்கு அதியுச்ச அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு அவரின் பொறுப்புக்கூறல் இல்லாதொழிக்கப்படுகின்றது. 

குழம்பும் சமநிலை

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சட்வாக்கத்துறை ஆகியன ஒன்றுக்கொன்று ஆய்வு செய்யவல்லதாக, சமநிலைத்தன்மை வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அவ்வாறான நிலைமை காணப்படுவ தே ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதாக இருக்கும். 

ஆனால் 20ஆவது திருத்தச்சட்டமானது, நிறைவேற்றுத்துறையை மட்டுமே அதிகாரங்கள் நிறைந்ததாக மாற்றுகின்றமையானது ஜனநாயகத்தினை முழுமையாக மறுதலிப்பதாகவே உள்ளது. 

கேள்விக்குறியாகும் வாக்குரிமை

20இல் ஜனாதிபதியால் ஒருவருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தினைக் கலைக்க முடியும் என்ற ஏற்பாட்டின் மூலம் மக்களின் வாக்குரிமை கேள்விக்குள்ளாகிறது.  ஜனாதிபதியானவர் சராசரியாக 50முதல் 55சதவீதமான செல்லுபடியாகும் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுகின்றார். பாராளுமன்ற பிரதிநிதிகள் சராசரியாக 70முதல் 75சதவீத செல்லுபடியாகும் வாக்குகளால் தெரிவாகின்றனர்.  

அவ்வாறிருக்க, வருடமொன்று கடந்தபின்னர் ஜனாதிபதி பராளுமன்றத்தினைக் கலைப்பாராயின் அதில் எவ்விதமான நியாயப்பாடுகளும் இல்லை. குறிப்பாக பாராளுமன்ற ஆட்சியை ஜனாதிபதி சாராத கட்சி கைப்பற்றுமிடத்து ஒருவருட காலத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தினைக் கலைத்து தனது கட்சியைச் சார்ந்த ஆட்சியாளர்களை தெரிவு செய்யுமாறு மக்களின் சுயாதீர்மானத்திற்கு சாவால் விடுக்க முடிகின்றது. இதன்மூலம் மக்களிடத்தில் இருக்கும் இறைமை பறிக்கப்படுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு

19ஆவது திருத்தமானது ஜனநாயகத்தினை பரந்துபட்டதாக்கவே கொண்டுவரப்பட்டதால் மக்கள் இறைமையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. ஆகவே அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை. ஆனால் 20ஆவது திருத்தமானது தனியொரு நருக்கான அதிகாரங்களை வழங்கி சர்வாதிகாரத்தினை நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்வதால் மக்கள் இறைமையின் அதிகாரம் மலினப்படுத்தப்படுகின்றது. ஆகவே 20ஆவது திருத்தச்சட்டத்தினை முன்னெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகின்றது. 

இரட்டை குடியுரிமையினால் ஏற்படவுள்ள ஆபத்து

20ஆவது திருத்தத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கும் ஒருவர் அரசியல் பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதற்கு வழிசெய்கின்றது. இந்த நிலைமையானது ஆபத்தானதாகும். உதாரணமாக, குறித்த நபர் குடியுரிமையைக் கொண்டிருக்கும் நாட்டுடன் பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்யும் போது அவருடைய கரிசனை எந்த நாட்டினை அடியொற்றியிருக்கும் என்பது கேள்விக்குள்ளாகின்றது. 

உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளின் குடியுரிமையைப் பெறுகின்றபோது தமது நாட்டுக்கு எதிரான விடயங்களுக்காக ஆயுதமேந்தவும் தயார் என்ற ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஆகவே அத்தகையதொருவர் அரசியல் பிரதிநிதித்துவத்தினைப் பெறுகின்றபோது பெரும் அச்சமான நிலைமையே ஏற்படும். 

மறுசீரமைக்கலாம்

19ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறை ரீதியாக பிரச்சினைகள் காணப்படுகின்றபோது அவற்றை மறுசீரமைப்பதற்காக சில திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதில் தவறில்லை. ஆனால் ஒரே நாளில் 20ஆவது திருத்தத்தினை அமைச்சரவையில் சமர்ப்பித்து வர்த்தமானியில் அறிவித்து விட்டு அனைத்து விடயங்களையும் தனி நபர் கையாள்வதற்கான அதிகாரங்களை வழங்குவது தவறானதொரு அணுகுமுறையாகும். 

அதேநேரம், பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள அனைத்து தரப்பினரும் இத்திருத்ததிற்கு எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று பொதுமக்களும் இந்த விடயத்தில் தெளிவுற்று தமது நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதன் ஊடாகவே வரவிருக்கின்ற பேராபத்தினை தடுக்க முடியும்.