(நேர்காணல்:- ஆர்.ராம்)

மக்களின் ஆணைக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில் தற்காலிக தீர்வாகவே 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்றுபொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான பிரேம்நாத் தொலவத்த வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்.

வருமாறு, 

மக்கள் ஆணை

19ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்களை தொடர்ந்தும் அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் நல்லாட்சியொன்றை முன்னெடுக்க முடியாது. அதில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. அதற்கு கடந்த ஆட்சியே சிறந்த உதாரணமாக இருக்கின்றது. அவ்வாறான மலினப்படுத்தப்பட்ட ஆட்சியொன்றை நாமும் முன்னெடுக்க முடியாது. ஆகவே தான் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான மக்கள் ஆணையை கோரியிருந்தோம் மக்களும் யதார்த்தத்தினை புரிந்து கொண்டவர்களாக மூன்றிலிரண்டு ஆணையை எமக்கு வழங்கியுள்ளார்கள். 

தற்காலிக தீர்வு

பௌத்த சமயத்திற்கு முதன்மை தானம் வழங்க மறுத்தவர்கள், நாட்டை பிளவு படுத்த விளைந்தவர்கள், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் நாட்டின் எதிர்காலத்தினை மையப்படுத்தி பரந்துபட்ட உள்ளடக்கத்துடன் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. அதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.  எனினும் தற்போது ஆட்சியை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான தற்காலிக தீர்வொன்றாகவே 20ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

தனிநபர் இலக்கல்ல

தற்போது எம்மிடத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரம், பாராளுமன்ற அதிகரம் என்று சகல அதிகாரங்களும் காணப்படுகின்றன. ஜனாதிபதி கோத்தாபயவை மையப்படுத்தி அதிகாரங்களை குவிப்பதற்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் அவ்வாறு தனிநபர் ஒருவரை மையப்படுத்திய அதிகாரக்குவிப்பு இங்கு நடைபெறவில்லை. ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் சகோதரர்களே இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆட்சியை முன்னெடுப்பத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்படாது. ஆனால் எதிர்காலத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் முறையாக இருப்பதன் ஊடாகவே நாட்டின் ஸ்திரமான நிலை நீடிக்கும். தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் செயற்பாட்டு ரீதியான இடம்பெறும். ஆகவே தான் அதிகாரங்களை முறையாக வகுக்க வேண்டியிருக்கின்றது. அதனை நபர் ஒருவரை நோக்கிய அதிகார குவிப்பாக அர்த்தப்படுத்துவது தவறானதாகும். 

நிறைவேற்று அதிகாரமும் பிரதமரின் நிலைப்பாடும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தபோது தான் உள்நாட்டு போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆகவே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் நிறைவேற்ற அதிகர ஜனாதிபதியின் அவசியம் பற்றி அவர் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார். 

தற்போதும் பிரிவினை சிந்தனையாளர்கள் நீடிக்கின்ற நிலையில் ஜனாதிபதிக்கு வலுவான அதிகாரங்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது. மேலும் ஜனாதிபதிக்கான அதிகரங்கள் படிப்படியாக குறைந்து செல்கின்றபோது நாட்டின் நிலைமைகளும் பின்னோக்கி நகர்ந்துள்ளமை எமக்கு முன்னுதாரணங்களாக இருக்கின்றன. அவ்வாறான நிலைமைகளை மாற்றி அமைப்பது கட்டாயமாகின்றது. 

பாராளுமன்றக் கலைப்பு

நெருக்கடியான நிலைமைகள் ஏற்படுகின்றபோது அதனை கையாள்வதற்காகவே பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான கால எல்லை குறைக்கப்பட்டு ஜனாதிபதியிடத்தில் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 20ஆவது திருத்தத்தில் உள்ளவாறாக பாராளுமன்றத்தினை ஜனாதிபதி கலைத்துவிடுவார் என்று கூறுவதற்கில்லை. 

மேலும் பாராளுமன்றத்தினை கலைத்தால் அடுத்ததாக மக்களிடத்திலேயே ஆணை கோரிச் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே நாட்டின் தலைவர் தவறான தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தினை கலைப்பாராயின் மக்கள் அதற்காக தீர்க்கமான முடிவுகளை பிரதிபலிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. 

ஆனால் தற்போதுள்ளவாறு பாராளுமன்ற அதிகாரங்கள் பகுதிபகுதியாக ஜனாதிபதியிடத்திலும், பிரதமரிடத்திலும் இருக்கும் நிலை தொடரமுடியாது.  கடந்த காலத்தில் அவ்வாறான நிலைமையால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் விரக்தியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இரட்டைப் பிரஜாவுரிமை

இரட்டைப் பிரஜாவுரிமை பற்றி தற்போது எதிரணியினரே அதிகம் கரிசனை காட்டுகின்றார்கள். இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த கோத்தாபய ராஜபக்ஷ தான் மூன்று தசாப்த போரை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தார். நகர அபிவிருத்திகளை முன்னெடுத்தார். ஆனால் கடந்த ஆட்சியில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டு பிணை முறிகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு காரணமாகியிருந்தார். 

தகவலறியும் சட்டம்

தகவல் அறியும் சட்;டம் நீக்கப்படுவதாக பொய்யான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. தகவலறியும் உரிமைச் சட்ட ஏற்பாடுகள் 20ஆவது திருத்தத்திலும் உள்வாங்கப்பட இருக்கின்றன. 

அதேபோன்று, ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தன் ஆயுட்காலம் உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்கள் எவையும் நடைபெறப்போவதில்லை. 20ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொள்வதற்கான தடைகளை ஏற்படுத்த விரும்புபவர்களே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றார்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்கள்

கடந்த காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கள் சுயாதீனமான இருந்ததாக வெளித்தோற்றத்திற்கு அவ்வாறு காண்பிக்கப்பட்டாலும் உண்மையில் அவ்வறான நிலைமைகள் காணப்படவில்லை. ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் திரைமறைவில் தீர்மானிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி ஆணைக்குழுக்கள் சுயாதீனமகவும்  வினைத்திறனாகவும் செயற்பட்டனவா என்பதும் வெளிப்படையான விடயமாகின்றது. 

உதாரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவரான பொலிஸ் மா அதிபரை தற்போது வரையில்  நீக்கமுடியாத நிலை நீடிப்பது சட்டம் ஒழுங்கினை முறையாக முன்னெடுப்பத்தற்கு பொருத்தமானதொன்றாக காணப்படவில்லை. இவ்வாறு தான் பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆகவே தான் தீர்மானம் எடுக்கவல்ல அதிகாரம் அவசியமாகின்றது. 

ஜனாதிபதி வேட்பாளரின்  வயதெல்லை மாற்றம்

19ஆவது திருத்தச்சட்டமானது ஜனநாயக பண்புகளை நிலை நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டதாக பகட்டுக்காகவே கூறப்பட்டது. உண்மையில் இந்த நாட்டை ஒருமுகப்படுத்தி சமாதத்தினை நிலைநாட்டிய ஒரு குடும்பத்தினை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டது. குறிப்பாக நாமல் ராஜபக்ஷ மீதான அச்சத்தின் காரணமாகவே 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் வயதெல்லை அதிகரிக்கப்பட்டது. 

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதை மையப்படுத்திய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ளவாறாக ஜனாதிபதி வேட்பாளருக்கான வயதெல்லை மாற்றப்பட்டிருக்கின்றது. அவ்வாறான மாற்றம் எந்தவொருவரையும் மையப்படுத்தியதாக இல்லை. 

அவசரமில்லை 

20ஆவது திருத்தச்சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்று அவசர அவசரமாக நாம் கொண்டுவரவில்லை. அதுபற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆட்சியில் உள்ள பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடுகள் அறியப்படுகின்றன. தேவகைள் ஏற்படுமாயின் திருத்தங்களை செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும், கடந்த அரசாங்கம் 19ஆவது திருத்தச்சட்டத்தச்சட்டம் நிறைவேறியதும் 20ஐக் கொண்டுவருவோம் என்று கூறி ஏமாற்றியதைப்போன்று நாம் செயற்பட மாட்டோம்.

மேலும் அதிகாரங்கள் எவ்வாறாக இருந்தாலும், அவற்றை பயன்படுத்துபவர்களின் கைகளில் தான் அனைத்தும் உள்ளது. உதாரணமாக கூறுவதாயின், கடந்த ஆட்சியாளர்கள் அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக மட்டப்படுத்தப்பட்டிருந்தபோதும் வேறுவேறு காரணங்களைக் கூறி அவற்றை அதிகரித்தனர். ஆனால் புதிய ஜனாதிபதி ஆட்சிப்பொறுப்பெடுத்து ஓராண்டை நெருங்கும் நிலையில் அவ்வாறான எந்தவிதமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது சிறந்த முன்னுதாரணமாகும்.