(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னைய ஆட்சியின் போது எல்லா விதமான ஊழல் மோசடிகளிலும் ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர். எனவே ராஜபக்ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பியே ஆகவேண்டும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிடுகையில்,

அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என ரவி கருணாநாயக்க கூறியமைக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாகவே கையாளப்படுகின்றன. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றன.

 எனவே இதன்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்கள் நிச்சியமாக கைது செய்யப்படுவார்கள் என்பது  திண்ணமாகும். நானும் எத்தனையோ தடவைகள் ராஜபக்ஷவினர் கைது செய்யப்படுவார்கள் என கூறியிருந்தேன். எனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியதில் எந்த தவறும் கிடையாது.

எவ்வாறாயினும் முன்னைய ஆட்சியின் போது எல்லா விதமான ஊழல் மோசடிகளிலும் ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்புப்பட்டுள்ளனர். எனவே ராஜபக்ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.