புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் 75 கிராம் போதைப்பொருள் மற்றும் இரண்டு இலட்சத்து அறுபதாயிரத்து இரண்டாயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் பௌத்த விகாரை மத்திய நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஹெரோயினை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்ததுடன் குறித்த ஹெரோயின் 12 இலட்சம் ரூபா பெருமதியென மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹெரோயின் மற்றும் ஹெரோயினைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.