ரொபட் அன்டனி 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தின் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சரவை பேச்சாளர் 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும்: வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன 

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  சகலஉறுப்பினர்களும்  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.  அவ்வாறு அறிவித்துள்ளது மட்டுமன்றி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகவும்  அதன் உருவாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும்   9 பேர் கொண்ட நிபுணத்துவ குழுவையும் அரசாங்கம் நியமித்திருக்கிறது. 

குறித்த 9 பேர் கொண்ட நிபுணத்துவ குழுவில் 2 சிறுபான்மை நிபுணத்துவ உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் மலையக சமூகத்தை பிரதிநித்துவ படுத்தும் நிபுணத்துவ பிரதிநிதி ஒருவரும் இந்த குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என்று மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.  

தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவர் மனோ கணேசன்  இதனை பல தடவைகள் வலியுறுத்திவிட்டார்.  எப்படியிருப்பினும் தற்போது நிபுணத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அந்த குழுவானது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை கட்டமைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தல் காலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமோக  வெற்றிபெற செய்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொது ஜன பெரமுன அரசாங்கம் விடுத்திருக்கிறது.   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இந்த கோரிக்கையை பகிரங்கமாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க போகின்ற அரசாங்கம் வரலாற்றில் முன்னைய அரசாங்கங்கள்  விடுத்த தவறுகளையும் வரலாற்றில் இலங்கை அடைந்த அனுபவங்களையும் கருத்திற்கொண்டு அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்று புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. 

அதாவது பல்லின மக்கள் பல் மத பல்மொழி பல் கலாசார மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது சகல தரப்புக்களினதும் பங்களிப்பும் ஈடுபாடும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். 

அதனடிப்படையில் சகல தரப்பு மக்களினதும் சகல தரப்பு சமூகங்களினதும் யோசனைகளையும் அவர்களது பங்களிப்புகளையும் அவர்களது ஈடுபாட்டையும் பெற்றுக்கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.  

அரசியலமைப்பை உருவாக்குவதில் கடந்தகால வரலாறு என்பது மிகவும் கசப்பானதாகவே காணப்படுகிறது. கடநத காலங்களில் அரசியல் அமைப்புக்களை  உருவாக்கும் போது சகல தரப்பினதும் கருத்துக்கள் கடந்த காலங்களில் உள்வாங்கப்பட்டனவா என்பது கேள்விக்குறியாகும். அந்த விடயத்தில் திருப்தியடையாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.  

 விசேடமாக தமிழ் பேசும் மக்களின் யோசனைகள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டனவா? அல்லது தமிழ் பேசும் மக்களின்  மக்களின் பங்களிப்பு   அரசியலமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பெறப்பட்டனவா என்று கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு முழுமையான பதில் வழங்க முடியாது. 

மூன்று அரசியலமைப்புக்கள் 
சோல்பரி யாப்பு கொண்டுவரப்பட்ட போதும் அதில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு காணப்படுகிறது. 

அதைப்போன்று 1972 ஆம் ஆண்டு சிறிமா அம்மையார் தலைமையில் முதலாவது குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்ட போது கூட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்றும் அந்த அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்பேசும் மக்களின் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வெகுவாகவே காணப்படுகிறது.  அதாவது ஆரம்பத்தில் பங்களிப்பு  பெறப்படும் சூழல் காணப்பட்டாலும் பின்னர் அது சாத்தியமடையவில்லை. 

அதேபோன்று 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை.      முக்கியமாக 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்க  செயல்பாட்டில் ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்ற போதிலும் கூட ஒரு கட்டத்தின் பின்னர் அவர்களின் பங்களிப்பு பெறப்படவில்லை. 

அதன்படி பார்க்கும்போது இதற்கு முன்னர் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று அரசியலமைப்புகளிலும் முக்கியமாக இரண்டு  குடியரசு அரசியலமைப்புகளிலும் தமிழ் பேசும் மக்களின் யோசனைகள் பங்களிப்புகள் அவர்களின் கருத்துக்கள் அவர்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இது வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு மிக முக்கியமான அப் பதிவாக இருக்கிறது. 

நல்லாட்சியில் நடந்தது என்ன? 
எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் போது தமிழ் பேசும் மக்களின் பங்களிப்புகள் யோசனைகள் உள்வாங்கப்பட்ட ஒரு செயல்முறை காணப்பட்டது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்பு உருவாக்க வேலைத்திட்டங்கள்  எடுக்கப்பட்டன. விசேடமாக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டிருந்ததுடன் அதன் கீழ் பல்வேறு உப நிறைவேற்றுக் குழுக் கள் நிறுவப்பட்டன.  

அதுமட்டுமன்றி   நிபுணர் குழு மக்கள் கருத்தறியும் குழு என  மிகப்பெரிய பரந்துபட்ட  ஒரு செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.  இந்த செயற்பாடுகளில் நாட்டின் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றதுடன் அவர்களது பங்களிப்பும் அதில் உள்வாங்கப்பட்டது. 

முக்கியமாக பிரதான வழிநடத்தல் குழுவில் தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் இடம்பெற்றிருந்ததுடன் தமது கருத்துக்களையும் யோசனைகளையும்  முன்வைத்திருந்தனர்.   அது கடந்தகால   அரசியலமைப்பு உருவாக்கங்களை விடவும்  வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக அமைந்தது.  

ஆனால் 2018 ஆம் ஆண்டளவில் நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன.   அத்துடன் அந்த செயற்பாடுகள் முடங்கின.  எனினும் இறுதி வரை அதாவது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் வரை தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு ஈடுபாடு அதில் மிக பரந்துபட்ட ரீதியில் காணப்பட்டன என்பதே யதார்த்தமாகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பானது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைக் கொடுத்து அந்த அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி இருந்தது. அதாவது விட்டுக்கொடுப்புகளை செய்தாவது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை  புதிய  அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்றதொரு எண்ணத்தில் கூட்டமைப்பு அப்போது செயற்பட்டிருந்தது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடந்த தேர்தலில் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது என்பதும் தற்போது அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது விடயமாகும்.   எவ்வாறெனினும் கடந்தகால வரலாறுகளுடன் ஒப்பிடுகையில்    நல்லாட்சியின் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு வெகுவாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால்  அந்த  முயற்சியை  நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.  

புதிய அரசாங்கத்தின் முயற்சி 
இந்த சூழலில் தற்போது புதிய அரசாங்கமானது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் அதனை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி சுமார் இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 

இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ள அரசாங்கமானது சகல மக்களினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு இதனை உருவாக்க வேண்டும். எந்த ஒரு காரணத்துக்காகவும் இந்த அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்பட கூடாது. முக்கியமாக இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் கடந்த 70 வருட காலமாக தமக்கான  அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு  தீர்வு திட்டத்தை கோரி நிற்கின்றனர். எனவே  அரசியல்  தீர்வுத் திட்டத்தை உள்ளடக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பானதாக அமையும் என்பது பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தின் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருக்கிறார். அதேபோன்று இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவித்திருக்கிறார். மேலும்  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும்  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன் அடிப்படையில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ள அரசாங்கம் சகல தரப்பினரதும் யோசனைகளை உள்வாங்கி பரந்துபட்ட  ரீதியில் அதனை  தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு என்பது இந்த நாட்டை வலுப்படுத்துவதாகவும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நாட்டின் எதிர்கால செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் இருக்கப்போகின்றது. 

அவ்வாறு நாட்டின் எதிர்கால செயற்பாடுகளில் தாக்கம் செலுத்த போகின்ற நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகின்ற  அரசியலமைப்பு உருவாக்கமானது ஒரு தரப்பினரால் மட்டும் முன்னெடுக்கப்பட கூடாது. அந்த உருவாக்க செயற்பாடுகளில்  சகல இன மக்களும் சகல தரப்பு மக்களும் சகல சமூகங்களும் கூட்டாக பங்கெடுக்க வேண்டும். 

பல்வேறு யோசனைகளையும் கருத்திற்கொண்டு ஒரு பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் சகல தரப்புக்களினதும்  உரிமைகளை  உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் கடந்தகாலத்தில் விடப்பட்ட தவறுகளிலிருந்து பாடங்களை கற்று மற்றும்  அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை கற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை சகல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பது மிக அவசியமாகின்றது. வரலாற்றில் விடப்பட்ட தவறுகளை மீண்டும் விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 

பன்முகத்தன்மையே வெற்றி 
இலங்கை என்பது பல்லின பல மத பல்கலாசார பழ்மொழி ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். எனவே உருவாக்கப்பட போகின்ற அரசியல் அமைப்பும் இந்த பன்முகத்தன்மையை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். பன்முகத் தன்மையின் ஊடாகவே ஒரு பலமான நாட்டை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு। பன்முகத்தன்மை ஊடாக கட்டி எழுப்பப்பட்ட நாடுகள் இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை உலகத்தில் நாம் சாதாரணமாக பார்க்கிறோம்.   

எனவே அதுபோன்றதொரு பன்முகத் தன்மையை கட்டியெழுப்புகின்ற நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. எனினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைய   சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். அவ்வாறெனின்  ஒரு சரியான ஒரு திட்டத்தை முன்னெடுத்து அதன் ஊடாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அதனை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். 

கூட்டு  முயற்சி  
முக்கியமாக  புதிய அரசியலமைப்பில் சகல இன மக்களினதும் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் இதில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த  தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை காண்பதற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக முயற்சிக்கப்பட வேண்டும். 

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு  அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனை என இரண்டு வகையான பிரச்சினைகள் காணப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து அபிவிருத்தியை ஒரு பக்கத்தில் முன்னெடுத்து மறுபக்கத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அந்த மக்களின் அரசியல் தீர்வு பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு சகலரும் முயற்சிக்க வேண்டும்.    இது ஒரு கூட்டு முயற்சியாக இடம்பெறவேண்டியது  அவசியமாகும்.