கொரோனா தொற்று சந்தேகத்தில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து  தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 95 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலையங்களான கல்பிட்டி , தியத்தலாவ , ஹெக்கிட்ட , பெல்வெஹெர மற்றும் இராஜகிரிய போன்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அவர்கள் வீடு திரும்பவுள்ளனர்.

அதேவேளை நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் நடைமுறையை முழுமையாக பூர்த்தி செய்த 40,401 நபர்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 57 தனிமைப்படுத்தும் நிலையங்களில் மேலும் 6,021 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் முப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை கண்டறிவதற்கு 1,890 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்பரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கு சுமார்  249,328 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.