நாட்டின் பல பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

எல்பிட்டிய 

எல்பிட்டிய பகுதியில் குருந்துகஹஹெதெக்ம - மன்டகன்த வீதிக்கு அருகில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்டகந்த நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கல்லன - நவத்தகல பகுதியைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொடதெனியாவ

கொடதெனியாவ - மீரிகம வீதி கட்டுகெந்த  பெரகும் வத்த பகுதிக்கு அருகில்  வியாழக்கிழமை  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டதெனியாவ நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் அக்கரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. வல்பிட்ட - மீரிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எம்பிலிப்பிட்டிய

எம்பிலிப்பிட்டிய வீதி - மித்தெனியஇ தோரகொலயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்ற லொறியொன்று முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஹீன் தலுக்ஹின்ன - மஹபெலெஸ்ஸ பகுதியைச்சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.