கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைவதற்காக வழங்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையால், நோய் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் இறப்பு விகிதம் குறையவில்லை என்றும், கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைவதற்கு இத்தகைய சிகிச்சை முழுமையான பலனை தராது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருப்பதாவது...

“நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 39 வைத்தியசாலைகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் PLACID எனும் ஆய்வினை மேற்கொண்டது. இதில் 460க்கும் மேற்பட்ட மிதமான தொற்று தீவிரம் கொண்ட நோயாளிகள் ஆய்வில் பங்குபற்றினர். இவர்களின் ஓக்சிஜன் செறிவு நிலை 93 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இவர்களில் 235 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் தொடர்ந்து 28 நாட்கள் அவதானிக்கப்பட்டனர். இதில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற 34 நோயாளிகள் இறந்தனர்.

பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்கள் 31 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த இரண்டு குழுக்களிலும் 17 பேருக்கு தீவிர நோய் தொற்று இருந்தது. இதன் காரணமாக பிளாஸ்மா சிகிச்சை கொரோனா நோய்த்தொற்றாளர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க உதவ வில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

தொகுப்பு அனுஷா.