கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை உடவலவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

1/4  ஏக்கர் நிலப் பகுதியில் நடப்பட்டிருந்த 3000 கஞ்சாச் செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளை ஆயுர்வேத திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், பலபொல - மில்லவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் சட்டைப்பையிலிருந்து கஞ்சா  மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் ஒருதொகை கஞ்சா பொதியொன்று மீ;ட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக 3 கிலோ 195 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கஹதுவ மற்றும் பலபொல பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.