(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவும் சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதே வேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது :  

கடற் பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதற்கமைய புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை வழியாக மன்னார் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

மாத்தறை தொடக்கம் பொத்துவில் வழியாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். ஏனைய பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 - 55 கிலோ மீற்றராகக் காணப்படும்.

இவ்வாறு பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் புத்தளம் தொடக்கம் அம்பாந்தோட்டை வழியாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற்பரப்புக்களில் கடல் அலையானது 2.5 - 3 மீற்றர் வரை உயரும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 50 மீல்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.  

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை , அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் மத்திய மலை நாட்டின் மேற்கு பகுதிகளிலும் இடைக்கிடை மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

பாதிப்புக்கள்

கடும் காற்று, மழை, வெள்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் நுவரெலியா, கண்டி, பதுளை, மொனராகலை, கேகாலை , இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட 14 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 956 குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டங்களில் 5 வீடுகள் முழுமையாகவும் 753 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வௌ;வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள 76 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.  இங்கு 9646 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 128 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திலுள்ள ஐவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாத்திரம் 1946 குடும்பங்களைச் சேர்ந்த 6175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 3 வீடுகள் முழுமையாகவும் 229 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

புத்தளத்தில் 921 குடும்பங்களைச் சேர்ந்த 3496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான 4 குடும்பங்களிலுள்ள 12 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 172 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே போன்று பதுளையில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரு வீடுகள் முழுமையாகவும் 26 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. களுத்துறையில் 16 குடும்பங்களிலுள்ள 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில்  ஒரு குடும்பத்திலுள்ள மூவர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது குடியிருப்பும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நுரவரெலியா, மொனராகலை, இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை வரை புதிதாக பாதிப்புக்கள் எவையும் பதிவாகியிருக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

--