( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்த இரு வாரங்களுக்குள் அவ்விசாரணைகளை நிறைவு செய்வதாக சி.ஐ.டி. நேற்று அறிவித்தது. 

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், விஷேட விசாரணைப் பிரிவு 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே இதனை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு  அறிவித்தார்.

கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல்  21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், சினமன் கிரான்ட்  ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தில் தற்கொலைதாரியாக செயற்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில்,  அந்த சம்பவத்தை மையப்படுத்திய நீதிவான் நீதிமன்ற விசாரணையின் கீழேயே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் மன்றுக்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவ்வழக்கு இடையீட்டு மனுவொன்றூடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

 இதன்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹம்மட்டின் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணி  கர்மான் ஹசீன்,  சட்டத்தரணிகளான ஹர்ஷன நாணயக்கார, நிரான் அங்கடெல், ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

 விசாரணையாளர்கள் சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே ஆஜரானார்.

 அத்துடன் முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவுடன் அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம ஆஜரானார்.

 இதன்போது மன்றுக்கு விடயங்களை விளக்க ஆரம்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட்,

 தனது சேவை பெறுநரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத தடை சட்டத்தின்  9 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் உரிய தடுப்புக் காவல் உத்தரவின்றியே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரே தடுப்புக் காவலில் கையெழுத்திட வேண்டும் எனும் நிலையில், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு  எந்த அமைச்சையும் வகிக்க முடியாது எனும் நிபந்தனை உள்ள நிலையிலும், தனது சேவை பெறுநரின் தடுப்புக் காவலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமையானது எந்த வகையில் செல்லுபடித் தன்மைக் கொண்டது என அவர் கேள்வி எழுப்பினார்.

 இதன்போது கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தலையீடு செய்த நிலையில்,

'  எனக்கு  தடுப்புக் காவல் உத்தரவின் சட்டத் தன்மை குறித்தோ, அல்லது ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்தோ தீர்மானிக்க முடியாது.  உயர் நீதிமன்றத்திலேயே அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 உண்மையில் ஜனாதிபதி எந்த அதிகாரத்தில் கையெழுத்திட்டார் என்பதெல்லாம் எனக்கு தெரியாத விடயங்கள்.

அண்மையில் வெளியிடப்பட்ட அமைச்சரவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் கூட பாதுகாப்பு அமைச்சராக எவரும் பெயரிடப்பட்டிருக்கவில்லை.  அப்படி இருக்கையில் ஜனாதிபதிக்கு, அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் ஊடாகவே விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் தீர்மானிக்க முடியாது.' என  தெரிவித்தார்.

இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா,  ஜனாதிபதி சட்டத்தரனி இக்ராம் மொஹம்மட்டின்  வாதங்கள் தொடர்பில் அடிப்படை ஆட்சேபங்களை முன் வைக்க முடியுமாயினும் தான் முன்வைப்பதாக இல்லை என சுட்டிக்காட்டினார்.

 ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில்  உயர் நீதிமன்றத்திலேயே சவாலுக்கு உட்படுத்த முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விடயத்தில் விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்யவுள்ளதாக சி.ஐ.டி.யினர் தமக்கு அறிவித்ததாகவும் அது தொடர்பில் அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்ள முடியும் எனவும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன பெர்னாண்டோ கூறினார்.

இதனையடுத்து, நீதிவான், மன்றில் ஆஜரான சி.ஐ.டி.யின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகேவிடம்,  விசாரணையின் நிலைமை  தொடர்பில் வினவினார்.

 அதற்கு  பதிலளித்த அவர்,  விசாரணைகள் கிட்டத்தட்ட நிறைவு மட்டத்தை அடைந்துள்ளதாகவும் அடுத்த இரு வாரங்களுக்குள் பூரணமாக நிறைவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

அதன் பின்னர் விசாரணை அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி உரிய ஆலோசனை பிரகாரம் செயற்படுவதாக அவர் கூறினார்.

 இதன்போது நீதிவான் ரங்க திஸாநாயக்க மீளவும்,  விசாரணை நிறைவடைந்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கவோ சந்தேக நபராக பெயரிடவோ, அல்லது சாட்சி இல்லை எனில் விடுவிக்கவோ சட்ட மா அதிபரைக் கோர வேண்டுமா? அதனை உங்களால் செய்ய முடியாதா என வினவினார்.

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா தலையீடு செய்து,  நாம் சந்தேக நபரா இல்லையா என ஆலோசனை வழங்க மாட்டோம் எனவும் தேவையான வழிகாட்டல்களை மட்டுமே கொடுப்போம் எனவும் நீதிவானுக்கு தெரிவித்தார்.

 இந் நிலையில், இந்த விவகாரம் குறித்த வழக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்த நீதிவான், அன்றைய தினம் முழுமையான விசாரணை அறிக்கையை மன்றுக்கு அளிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.