-பி.கே.பாலச்சந்திரன்

இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கும் 20ஆவது திருத்தத்துக்கு மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டியது அவசியமாகும். இதற்கு வலுவான சட்டரீதியான ஆதாரங்கள் இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சிறந்த உச்ச நீதிமன்ற சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கூறுகிறார்.

அரசியலமைப்பில் பதிக்கப்பெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை மாற்றுவதற்கு 20ஆவது திருத்தம் முயற்சிக்கிறது. எந்தவிதமான தடுப்பும் சமநிலைப்படுத்தலும் இன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அந்த திருத்தம் சகல அதிகாரங்களையும் வழங்குகிறது என்று கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு அடிப்படை அம்சங்களை மாற்றுவதாக இருந்தால், திருத்தச்சட்ட மூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு உட்படுத்த வேண்டியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அடிப்படை கட்டமைப்புகள் கோட்பாடு

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகள் கோட்பாடு பற்றி விளக்கம் அளிக்கும் சுமந்திரன், அரசியலமைப்பு என்பது ஜனநாயக அடிப்படையிலானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மீது அதீதமாக அதிகாரங்களை குவிக்க முடியாது. 1978 அரசியலமைப்பு மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியது என்றபோதிலும், 1990களின் நடுப்பகுதிகளில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சிகாலத்தில் தொடங்கி பலம்பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு எதிராக இலங்கையில் வலுவானதும் தொடர்ச்சியானதுமான இயக்கம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த போராட்டத்தின் மிகவும் அண்மைய கட்டம் (2014 - 2015) காலகட்டமாகும். நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை முழுமையாக ஒழிப்பது என்று மக்களுக்கு வாக்குறுதியளித்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார் என்று குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு என்பது மரத்துப்போன ஆவணமோ மாற்றியமைக்க முடியாத வகையில் கல்லில் பொறிக்கப்பட்ட அரச ஆணையோ அல்ல. வளருகின்ற ஒரு மொத்த உருவாகும். அதன் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு பல வருடங்களாக மாற்றமடைந்திருக்கிறது. அதிகார ஒருமுகப்படுத்தல் இல்லாத அல்லது தடுப்புகளுடனும் சமப்படுத்தல்களுடனும் (Checks and Balances) கூடிய அதிகாரமே அரசியலமைப்பின் மெய்க் கருத்தில் பொதிந்துள்ள அடிப்படை கோட்பாடாகும். இதை பெருமளவுக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கும்போது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டியது மிகமிக கட்டாயமானதாகும் என்று சுமந்திரன் விளக்கமளித்தார்.

அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதன் மூலமாக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அந்த திருத்தத்தில் பொதிந்துள்ள தடுப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள் ஏற்பாட்டை நாட்டு மக்களிடமிருந்து அபகரிக்கப்போகின்றது. 20ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படப்போகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஜனாதிபதியின் விருப்பங்களை நிறைவேற்றப் போகின்றன. அரசியலமைப்பு பேரவையை (Constitutional Councle) பதிலீடு செய்யப்போகும் பாராளுமன்ற பேரவை (Parliamentary Councle) பாராளுமன்றத்துக்கு வெளியே எம்.பி.க்கள் அல்லாதவர்களிடமிருந்தும் மேன்மை வாய்ந்த பிரமுகர்களிடமிருந்தும் பெறுமதிவாய்ந்த கருத்துகள் பெறப்படக்கூடியதாக இருக்கின்ற நிலையை இல்லாமல் செய்வது மாத்திரமல்ல, அதன் சம்மதத்தையல்ல அவதானங்களை மாத்திரமே ஜனாதிபதி நாடவேண்டியிருப்பதன் காரணத்தினால் அதன் வலுவையும் இழக்கிறது. மறுபுறத்தில் அரசியலமைப்பு பேரவையின் கருத்துகளின் பிரகாரம் ஜனாதிபதி செயற்பட வேண்டியதை 19ஆவது திருத்தம் கட்டாயமாக்கியது.

எவரையும் நியமிப்பதற்கும் பதவி நீக்குவதற்குமான உரிமையை 20ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ஜனாதிபதி அமைச்சரவையில் இணைந்துகொள்ள முடியும். அமைச்சரவையின் வேறு உறுப்பினர்களாக யார்யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும், அவர்கள் என்னென்ன அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்க முடியும், எவ்வளவு காலத்துக்கு வைத்திருக்க முடியும் என்பதையெல்லாம் ஜனாதிபதியே தீர்மானிப்பார். 1978 ஜனாதிபதி ஆட்சிமுறை அரசியலமைப்பின் சிற்பியான ஜே.ஆர். ஜெயவர்தனா, தனது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி குறித்து கூறியபோது, ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரத்தை தவிர ஏனைய சகல அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருப்பார் என்று கூறினார் என்பது இன்னும் பிரபல்யமாக பேசப்படுகின்றது. 

எதிர்வாதம்

1978ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசியலமைப்பில் இருந்து வந்த அம்சங்களை மீளவும் கொண்டு வருவதை மாத்திரமே 20ஆவது திருத்தம் செய்கிறது என்று அரசுக்கு சார்பான முன்னணி சட்டத்தரணிகள் எதிர்வாதம் ஒன்றை முன்வைக்கிறார்கள். ஆனால், அந்த 20ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டில் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை நிலவிய சூழ்நிலையை மாத்திரமே மீளவும் கொண்டு வரும். தவிரவும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை வலுப்படுத்துவதை மாத்திரமே 20ஆவது திருத்தம் செய்யப்போகிறது. அந்த திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் மாற்றங்களை செய்யவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் அந்த அரச சார்பு சட்டத்தரணிகள் நியாயம் கற்பிக்கிறார்கள்.

மேலோட்டமான ஆட்சேபங்கள்

ஆனால், இந்த வாதத்தை மேலோட்டமானது என்று சுமந்திரன் நிராகரிக்கின்றார். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகள் பற்றி ஆராய்கின்றபோது மூன்று விடயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முதலாவதாக, அரசியலமைப்பு என்பது ஒரு நிலையான பொருளல்ல. ஆனால், அது மக்களின் மாறுகின்ற அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான உயிர்வாழும் - வளர்ந்துக் கொண்டிருக்கின்ற ஒரு உருவாகும். அதனால், ஜனநாயக நாடுகளில் அரசியலமைப்புகளுக்கு மாற்றம் என்பது உள்ளியல்பான குணாம்சமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, மாற்றம் என்பது ஜனநாயகத்தின் திசையிலானதாக இருக்க வேண்டுமேயன்றி, எதேச்சாதிகாரத்தை நோக்கிய பிற்போக்கானதாக இருக்கக்கூடாது. ஜனநாயக திசையிலான மாற்றம் அரசியலமைப்பின் மெய்கருத்தின் அடிப்படையிலானதாக இருக்கும். மற்றையது அதை மீறுவதாக இருக்கும். இந்த இரு கோட்பாடுகளின் அடிப்படையிலும் நோக்குகின்றபோது, 19ஆவது திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் பிரகாரமானதாக கருதமுடியும். அதேவேளை, 20ஆவது திருத்தம் அதற்கு எதிராக இருக்கும். ஏனென்றால், 20ஆவது திருத்தம் தடுப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள் கோட்பாட்டுக்கு இசைவான முறையில் அதிகாரப் பகிர்வுக்கு அல்ல, அதிகார ஒருமுகப்படுத்தலுக்கே வழிவகுக்கிறது.

மூன்றாவதாக, இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தளர்வுபடுத்தி அல்லது ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என்று கோரும் இடையறாத ஜனநாயக இயக்கமொன்று நீண்டகாலமாக இருந்து வருகிறது. அது முழுமையாக வெற்றிகரமானதாக அமையவில்லை என்பது வேறு விடயம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி 1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோதிலும், அது நீண்டகாலமாக தொடர்ந்து நிலைத்து வருகிறது. ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதால் சலிப்படைந்துபோன இலங்கை மக்கள் 1990களின் நடுப்பகுதியிலிருந்து அந்த அதிகாரங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

சந்திரிகா குமாரதுங்க தனது அரசியலமைப்பு அதிகாரங்கள் பெருமளவானவற்றை பாராளுமன்றத்துக்கு வழங்குவதற்கு உறுதியளித்துக் கொண்டு ஜனாதிபதி பதவிக்கு வந்தார். அதற்கு பிறகு ஒவ்வொரு பிரதான கட்சியினதும் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களினதும் நிகழ்ச்சி நிரலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிமுறை ஒழிப்பு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை தனது முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக கூறிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்த கடைசி மனிதர் மைத்திரிபால சிறிசேன ஆவார்.

அத்தகைய ஒரு ஜனநாயக ஏக்கத்தின் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்காக 2001ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்று சுமந்திரன் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி குமாரதுங்கவின் ஒத்துழைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இதை செய்தது.

ஆனால், முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் நிலை என்று வந்தபோது தனது அதிகாரங்களை கைவிட குமாரதுங்க விரும்பவில்லை. நான்காவது ஈழப்போரின்போதும் அதற்கு பிறகும் உறுதிவாய்ந்த பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்றுக்கான தேவையை ஜனாதிபதி ராஜபக்ச உணர்ந்தார். 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் மகிந்த ராஜபக்சவுக்கு தேவைப்பட்ட சகல அதிகாரங்களையும் அதைவிட கூடுதல் அதிகாரங்களையும் கொடுத்தது.

ஆனால், 2014ஆம் ஆண்டளவில் முற்றுமுழுதான அதிகாரம் அவரது ஆட்சியை முற்றுமுழுதாக ஊழல்தனமானதாக மாற்றியது. ஒரு மனிதரில் அல்லது பகுதியில் அதிகாரங்கள் ஒருமுகப்படுத்தப்படாத ஆட்சி ஒன்றுக்கான மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடப்போவதாகக் கூறிக்கொண்ட மைத்திரிபாலவிடம் ராஜபக்ச, ஜனாதிபதி பதவியை இழந்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதற்கும் 2015ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், 19ஆவது திருத்தத்தின் கீழ் நடைமுறைக்கு வந்த குழப்பகரமான முறைமை அந்த திருத்தத்தினால் உருவாக்கப்பட்ட புதிய நிலைவரத்துக்கும் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரின் (மைத்திரிபால சிறிசேன) உள்ளியல்பான நலன்களுக்கு இணங்கிப்போக முடியவில்லை என்பது கவலைக்குரியது. 19ஆவது திருத்தத்தின் குறைபாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகள் ஓரளவுக்கு காரணமாகின. 

அந்த அரசாங்கத்தின் தோல்வி உறுதியானதும் பலம் பொருந்தியதுமான ஒரு அரசாங்கம் இல்லாமல் இலங்கை முன்னேற முடியாது என்ற உணர்வை பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவின் சாதனை வெற்றியும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பிரமாண்டமான வெற்றியும் சிங்கள பெரும்பான்மையினர் மத்தியிலான இந்த உணர்வை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.

அதிகார ஒருமுகப்படுத்தலுக்கு ஆதரவானதாக அரசியல் நிலைவரம் இருக்கின்ற பின்புலத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, 19ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாக பதிலீடு செய்கின்ற 20ஆவது திருத்தத்துக்கான வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தினார். சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற 19ஆவது திருத்தத்தில் இருக்கின்ற சில கட்டமைப்புகள் 20ஆவது திருத்தத்தின் கீழும் தொடர்ந்து இருக்கும். ஆனால், அவை உள்ளடக்கம் இல்லாதவையாகவே மாத்திரம் இருக்கும். 

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்துக்கு போகப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருக்கிறது. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமானதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை வேண்டுகோளாக இருக்கும் என்று சுமந்திரன் கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பணிகளை நசுக்குகின்ற குறைபாடுகளை கொண்டிருப்பதாக 19ஆவது திருத்தம் உள்ளதை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த குறைபாடுகள் குளிப்பாட்டிய தண்ணீருடன் சேர்த்து பிள்ளையையும் வீசுவதை போன்றல்லாமல், உகந்த முறையில் சீர் செய்யப்படுவதற்கு அந்த குறைபாடு குறித்து தீர்க்கமாக ஆராய முடியும்.