(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஏற்பாடுகள் தகவலறியும் உரிமைச்சட்டம், பொதுச்செலவீனங்கள் மீதான கண்காணிப்பு, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், சுயாதீனமான தேர்தல்கள் ஆகிய முக்கியத்துவமுடைய விடயங்களில் பெருமளவிற்குத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே இவைபற்றி முதலில் நாட்டுமக்கள் தெளிவடைவதுடன் இதுகுறித்த விரிவான கலந்துரையாடலொன்றும் இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக ஒபேசேகர தெரிவித்தார்.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் கொழும்பிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று  ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த ஜனநாயகக் கட்டமைப்புக்களின் மீது குறித்தளவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.

எனவே இதுபற்றி மக்கள் தெளிவு பெறுவதுடன் விரிவான பகிரங்க கலந்துரையாடலொன்றும் இடம்பெற வேண்டியது அவசியமானதாக மாறியிருக்கிறது. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதை முன்நிறுத்தி செயற்பட்டுவரும் எமது அமைப்பு, அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் பிரதானமாக 4 விடயங்கள் மீது அவதானம் செலுத்தியிருக்கின்றது.

தகவலறியும் உரிமை , இலஞ்சம், ஊழல் மீதான விசாரணை , பொதுச்செலவீனங்கள் மீதான கண்காணிப்பு , சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் என நான்கு விடயங்கள் மீது அவதானம் செலுத்தப்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.