இந்திய தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமர் பிள்ளை கண்டுபிடித்த மூலிகை எரிபொருள் விரைவில் தனியார் நிறுவனம் மூலம் சந்தைப்படுத்தப்படவிருக்கிறது.

 தமிழக நகரான ராஜபாளையத்தில் தொழில்வர்த்தக சங்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மூலிகை விஞ்ஞானி ராமர் பிள்ளை பங்குபற்றினார். அதன் போது இந்தியா முழுவதும் மூலிகை பெற்றோல் விற்பனை  உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அவர் கையளித்தார்.

இந்நிகழ்வின் போது, அவர் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். சாக்கடை கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து, அதனுடன் இவரது கண்டுபிடிப்பான இரு கலவைகளை கலந்து எரிபொருளாக மாறுவதை செய்து காட்டினார். தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தன்னுடைய தாயின் நினைவாக "தமிழ் தேவி மூலிகை எரிபொருள்" என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி இயக்கியும் காட்டினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ எம்முடைய 21 வருட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எம்முடைய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கான முழு உரிமையை மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன். வரும் 18ஆம் திகதி முதல் வியாபார ரீதியாக மூலிகை பெற்றோல் விற்பனைக்கு வரும்.” என்றார்.