(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை இரவு முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 121 மில்லி மீற்றர் என்ற அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே போன்று கொழும்பு உள்ளிட்ட மேலும் 12 மாவட்டங்களும் கடும் மழை பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த நான்கு நாட்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களில் 1,715 குடும்பங்களைச் சேர்ந்த 6,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 17 வீடுகள் முழுமையாகவும் 554 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை இரவு முதல் பெய்யும் கடும் மழையால் கொழும்பு மாவட்டத்தின் பல வீதிகளும் நீரில் மூழ்கியிருந்தன. வெல்லம்பிட்டிய, அங்கொட, தெமட்டகொட, ஆமர்வீதி, கொழும்பு பல்கலைகழக வளாகம் என்பன வெள்ள நீரில் மூழ்கியிருந்தமையால் நேற்று காலை குறித்த வீதிகளினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதேவேளை மேலும் சில தினங்களுக்கு இவ்வாறான மழையுடனான காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மத்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி
நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலைக்கமைய 12 மாவட்டங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மற்றும் காலி மாவட்டத்தில் 100 - 121 மில்லி மீற்றர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று காலை கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கலகெடிஹென பகுதியில் வீதியின் குறுக்கே கொள்கலனொன்று குடை சாய்ந்தமையால் சுமார் 2 மணித்தியாலங்கள் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இதே போன்று கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் பெரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் நேற்று காலை சில மணித்தியாலங்கள் குறித்த பகுதியூடான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக குறித்த பிரதேசவாசிகள் பொலிஸாருடன் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய பின்னரே போக்குவரத்து சீராகியது.

பாதிப்புக்கள்
நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 3 நாட்களில் கடும்மழை, காற்று, மின்னல் தாக்கம், மரம் முறிந்து விழுதல், சுவர் இடிந்து விழுதல், மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றின் காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

நுவரெலியா
நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலையால் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கண்டி
கண்டி மாவட்டத்தில் கங்காவத்தகோரள, உடுநுவர, புஜபிட்டி, தெல்தோட்டை, மெததும்பர, உடுதும்பர உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 130 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு ஏனைய கட்டடங்கள் ஐந்தும் சேதமடைந்துள்ளன.

பதுளை
பதுளையில் ஹல்துமுல்ல, ஊவாபரணகம, எல்ல, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் கடும் காற்றினால் அனர்தத்திற்கு உள்ளான ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் இம்மாவட்டத்தில் 12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 92 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளிலி வசித்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில, வெல்லவாய, மெதகம, பிபில, படல்கும்புற மற்றும் சியம்பலாதுவ பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 23 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு கட்டடமொன்றும் சேதமடைந்துள்ளது.

கேகாலை
கேகாலை மாவட்டத்தில் ரன்வெல்ல, கேகாலை, புலக்கொஹூபிட்டி, வரகாப்பொல, மாவனெல்ல, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்வெல்ல, யட்டியாந்தோட்டை, அரநாயக்க பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 வீடுகள் முழுமையாகவும் 21 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல, எலபத, நிவித்திகல, இரத்தினபுரி, எஹெலியகொட, இம்புல்பே, பெல்மடுல்ல பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை
திஹாகொட மற்றும் ஹக்மன பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுவான, சூரியவௌ பெலியத்த மற்றும் தங்காலை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கொழும்பு
கொழும்பில் இரத்மலானை, கொலன்னாவ, கோட்டை, மொரட்டுவ, பாதுக்க, மஹரகம, தெஹிவல, ஹோமாகம, திம்பிரிகஸ்சாய, கெஸ்பேவ, சீதாவாக்கை மற்றும் கடுவலை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 வீடுகள் முழுமையாகவும் 136 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கம்பஹா
களனி, அத்தனகல, மஹர, மினுவாங்கொடை, தொம்பே, ஜாஎல, பியகம, நீர்கொழும்பு, மீரிகம, திவுலபிட்டி, வத்தள, கட்டான மற்றும் கம்பஹா பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 538 குடும்பங்களைச் சேர்ந்த 2473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 96 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம்
கற்பிட்டி, சிலாபம், முந்தலம், வனாத்தவில்லு, வென்னப்புவ, ஆனைமடு, தங்கொட்டுவ, நாத்தாண்டியா மற்றும் மகாவௌ பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 18 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.  

திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் சீதுவ பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.