(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அச்சம் உள்ளதாகவும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் இருப்பதால் அவர்களை கைது செய்தால் எங்கு தடுத்து வைப்பது என்ற சிக்கல் இருப்பதாகவும் அலங்கார மீன்கள் , நன்னீர் மீன்கள் , இறால் வளர்ப்பு , கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  புதன்கிழமை, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றிய சார்ல்ஸ் எம்.பி வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார். இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதற்கு பதில் தெரிவித்த அலங்கார மீன்கள் , நன்னீர் மீன்கள் , இறால் வளர்ப்பு , கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர:-  கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் இருந்த கடற்படைகள் நியூ டயமன் கப்பல் மீட்பு பணிகளுக்கு ஈடுபட்ட காரணத்தினால் சில நெருக்கடிகள் இருந்தன. 

எனினும் பாதுகாப்பு கூட்டத்தில் இந்த விடயங்களை மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம். அதுமட்டுமல்ல கொவிட் -19 நெருக்கடிகள் உள்ள நிலையில் இந்திய மீனவர்களை கைது செய்தால் எங்கு தடுத்து வைப்பது என்ற கேள்வி உள்ளது. எனவே இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் வடக்கு கடல் பகுதி அதிக பாதுகாப்பிற்கு உற்படுத்தப்படும் என்றார்.