ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் திகதி, தற்கொலையை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (The International Association for Suicide Prevention(IASP)), உலக சுகாதார அமைப்பு (World Health Organization)மற்றும் உலக மன நல கூட்டமைப்பு (the World Federation for Mental Health) இவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திகதியில் தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டங்களையும், தற்கொலை தடுப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஆண்டொன்றிற்கு 1 மில்லியன் மக்கள் தற்கொலையால் மரணிப்பதாகவும், ஒரு நொடிக்கு 40 என்ற வீதத்தில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் இறந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தற்கொலையால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியனாக அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அவதானித்திருக்கிறது. மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐம்பது சதவீதத்தினர், தற்கொலை முயற்ச்சியில் தோல்வியடைந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள பல காரணங்கள் இருப்பினும், உடல் அல்லது உள்ளத்தின் வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்ற காரணிகளே பிரதானமாக இடம்பெறுகின்றன.

15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களே தற்கொலையில் ஈடுபடுவதாகவும், உலகில் மனித இறப்பின் காரனங்களில் 13வது இடத்தை தற்கொலை பிடித்துள்ளதாகவும், உலகில் நடைபெறும் கொடூரமான மரணங்களில் ஐம்பது சதவீதம் தற்கொலைகளாக தான் உள்ளன என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நாளில் உங்களின் நண்பர்களோ அல்லது தோழிகளோ தற்கொலை எண்ணம் குறித்து விவாதித்தாலோ அல்லது அது குறித்து பேசினாலோ அவர்களிடம் அதிக அக்கறை காட்டி, அரவணைத்து, அன்பின் வலிமையையும், நம்பிக்கையையும் குறித்து பேசத் தொடங்குங்கள்.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.