புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு பூராகவும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். 

அத்துடன் நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள வயல்கள் 120,000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் “தேசிய உணவு உற்பத்தி பங்களிப்பு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்படும். குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும். 

கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உத்தேசிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. 

“இதற்கு முன்னரும் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது நிபுணர்களினதும் மக்களினதும் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியது. குளங்களை தோண்டி ஆழப்படுத்தினாலும் நீரை தேக்கி வைக்கக்கூடிய புராதன தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான முறைகள் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். அவ்வாறான குறைபாடுகளை களைந்து பொதுவான வழிமுறைகளின் மூலம் அந்தந்த பிரதேசங்களுக்கு மற்றும் குளங்களுக்கு உரிய முறைமைகளின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்” என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

குளங்களில் படிவுகள் நிரம்புவதினால் அவற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதிகளவான குளங்களில் கரைகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்போகத்தை இலக்காக்கொண்டு அவற்றை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதன் அவசியத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

வயல் நிலங்களுக்கு மாத்திரமன்றி குடிநீரை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய நீர்த் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகவும் குளத்து நீரை பயன்படுத்துவதன் இயலுமை பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

நீர்ப்பாசன கட்டமைப்பின் மூலம் இயங்குகின்ற விவசாய காணி பயன்பாடு தொடர்பாக காணி உபயோகத் திணைக்களம் மற்றும் கமத்தொழில் திணைக்களம் ஒன்றிணைந்து கணக்கெடுப்பு ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம் கண்டறியப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு சிறப்பான முறையில் நீரை முகாமைத்துவம் செய்து ஏனைய போகங்களில் இனங்காணப்பட்ட 17 வகையான பயிரினங்களை பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

குளங்களை புனர்நிர்மாணம் செய்தல், குளம் சார் கைத்தொழில்களை பாதுகாக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். விவசாயம் சார் நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். குளங்களை புனர்நிர்மாணம் செய்வதுடன், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். 

பயிர்ச் செய்கைக்கான நீரை வழங்குதல் மற்றும் குடிநீர் விநியோகத்தை நோக்கமாகக்கொண்டு திட்டமிடப்பட்ட “உத்துரு மெத மகா எல” (வடமத்திய பாரிய கால்வாய்) மற்றும் “வயம்ப எல”  (வடமேல் கால்வாய்) திட்டங்களை துரிதமாக நிறைவு செய்வதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன் கீழ் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 1500 கிராமிய குளங்கள் சார்ந்த 80,000 ஹெக்டெயார் பயிர் நிலங்களில் இரு போகங்களிலும் பயிரிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் ஆறுகளை அண்டிய பகுதியில் உள்ள வன ஒதுக்கீடுகளை ஆறு மாதங்களுக்குள் வர்த்தமானி மூலம் அறிவிப்பது தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. 

வன ஒதுக்கீடுகளுக்குள் உள்ள 500 சிறியளவிலான குளங்களை மிருகங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உடனடியாக புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். அதற்காக நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு வருட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். 

நீர்ப்பாசனத் துறையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற பொறியியலாளர் மற்றும் தொழிநுட்ப அதிகாரிகள் வெற்றிடங்களை தாமதமின்றி நிரப்புவதன் அவசியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. 

புதிய விவசாய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளம் தொழில் முயற்சியாளர்கள் 500 பேரை சேதனப் பசளை விவசாயத்திற்கு ஈடுபடுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள (தருன கொவி சௌபாக்கியா, காபனிக்க கொவிபல வெடசட்டஹன) – “இளம் விவசாய சுபீட்ச சேதனப் பசளை பயிர் நில வேலைத்திட்டம்” பற்றியும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. மாதுறு ஓயவின் தெற்கு கரையில் 5,000 ஏக்கர்களை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களினதும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர்  இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.