(க.பிரசன்னா)

தொழிலாளர்களின் சந்தா பணத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக் காரியாலயம் தனியார் நிறுவன காவலாளிகளின் தங்குமிடமாகவும் அவர்களுக்கு உணவும் மதுபானமும் வழங்கும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் வழங்கப்படும் சந்தா பணத்தில் உருவாக்கப்பட்ட இராஜகிரியவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயம் தற்போது பாதுகாப்புக்காக பலர் தங்கியிருக்கும் பாதுகாப்பு மடமாகவே காணப்படுகின்றது. 

இவை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வழங்கும் 150 ரூபா சந்தா பணத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே சந்தா பணத்தை வழங்குவதை அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பெருந்தோட்டங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களின் போது சந்தா பணத்தில் தொழிற்சங்கம் மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. சந்தா பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியில் அங்கத்துவ பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தவிருந்தது. ஆனால் எவையும் நடைமுறையில் இல்லை. 

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு வங்கியில் 9 கோடி ரூபாவுக்கு நிலையான வைப்பு காணப்படுகின்றது. இதன்மூலம் மாதாந்தம் 15 இலட்சம் ரூபா வட்டி கிடைக்கின்றது. 1 ஏக்கர் நிலப்பரப்பில் இராஜகிரியவில் தொழிலாளர்களுடைய பணத்தில் கட்டிடம் ஒன்று உள்ளது. இவை அனைத்தையும் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் இயங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருக்கின்றது. இருப்பினும் சட்டவிரோதமான முறையில் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வோம் என்றும் கூறினார்.