(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியல் ரீதியில் பலிவாங்கும் நோக்கிலே எனக்கு எதிராக போலி சாட்சியங்களை சோடித்து மரண தண்டனை வளங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி எனக்கு நியாயம் பெற்றுத்தரவேண்டும் என இரத்தினபுரி மாவட்ட ஆளுங்கட்சி உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய வங்கி அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்த அவர் தனது கன்னி உரையில் மேலும் கூறியதாவது,

நான் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். சீசீரீவி காட்சிகளை சோடித்து சாட்சி தயாரித்து என்னை சி.ஐ.டி குற்றவாளியாக்கியது. இதற்கு சானி அபேசேகர முன்னின்று செயற்பட்டார். சில பொலிஸாரும் இதற்கு பங்களித்தார்கள். இவர்களை கைது செய்து உரிய விசாரணை நடத்தி எனக்கு நியாயம் நிலைநாட்ட வேண்டும். எனக்கு பாரிய அநீதி இளைக்கப்பட்டிருக்கின்றது . 

நான்கு பிள்ளைகளின் தந்தையான நான் இந்த கொலையை செய்யவில்லை. அது எனது மனசாட்சிக்கு தெரியும். எனக்கு பாராளுமன்றம் வர நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. அதற்கு நீதிமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மேலும் எனக்கு அரசியல் ரீதியில் பலிவாங்கல் நடைபெற்றது. நான் எனது அரசியல் வாழ்வில் ஐந்து சதம் கூட மோசடி செய்தது கிடையாது. 2001முதல் 2020வரை தேர்தல்களில் நாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றி இதனை ஒப்புவிக்கின்றது. நிவித்தகல தொகுதியை வெற்றிகொள்ள முடியாததன் காரணமாகவே எனக்கு எதிராக போலி சாட்சியங்களை தயாரித்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த தலதா அத்துகோரள, எனக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அமைச்சுப்பதவியை துறந்து கொழுந்து பறிக்கச்செல்வதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்தளவு தலையீடு செய்திருக்கின்றார்கள் என்பதை உணந்துகொள்ளலாம் என்றார்.