நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வாகன போக்குவரத்து கலகெடிஹேன பகுதியில் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொள்கலன் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் போக்குவரத்து மாதம்பே பகுதியில் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்த காரணத்தால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர ரயில் போக்குவரத்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.