நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள்  மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று இரவு 10 மணி முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால் கொழும்பின் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, வோட் பிளேஸ், பேஸ்லைன் மற்றும் தும்முல்ல உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு - நவகம்புர பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் குறிப்பாக ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.