(நா.தனுஜா)
தற்போது சர்வாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் உலகின் மிகப்பழமையான ஜனநாயக நாடுகளையும் விஞ்சிய நிலைக்குச்சென்று 'பூமியில் மிகவும் சோகமான இடம்' என்ற பெயரை இலங்கை பெற்றுக்கொள்ளப் போகிறதா? அதுமாத்திரமன்றி ஆசியாவின் இறுதி சர்வாதிகார நாடு என்ற பெயரையும் எமது நாடு பெறப்போகிறதா? என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடுகளான பெலாரஸ் மற்றும் டோகா என்பன இப்போது சர்வாதிகாரப்போக்கை நோக்கி வளர்ச்சி கண்டிருக்கின்றன. இந்நிலையில் நாம் டோகாவையும் விஞ்சிய நிலைக்குச்சென்று 'பூமியில் மிகவும் சோகமான இடம்' என்று எமது நாடு அழைக்கப்படுகின்ற நிலையை அடைந்து விடுவோமா? அதுமாத்திரமன்றி ஆசியாவில் அமைந்துள்ள பெலாரஸை போன்று இலங்கையும் 'ஆசியாவின் இறுதி சர்வாதிகார நாடு' என்ற நிலையை எட்டிவிடுமா?

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் விதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருப்பதுடன் அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவில் '1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மிகவும் வலுவான நிறைவேற்றதிகாரப் பதவியை மஹிந்த ராஜபக்ஷ எதிர்த்தார். எனினும் அவரால் எதிர்க்கப்பட்ட அந்தப்பதவிக்குரிய விரும்பத்தகாத கூறுகள் அனைத்தும் தற்போது 2020 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் என்ற வடிவில் கோத்தபாய ராஜபக்ஷவினால் மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது' என்று சுட்டிக்காட்டியிருந்த மங்கள சமரவீர, தற்போது இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.