(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நாட்டு மக்கள் எதிர்க்கமாட்டார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித ஏற்பாடுகளும் திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை. மக்களாணையை பெற முன்னர் வழங்கிய வாக்குறுதிகளையே  தற்போது நிறைவேற்றியுள்ளோம் என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.  தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம்  நாட்டுக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்த்து  ஆதரவு வழங்கினோம். பாராளுமன்றத்துக்கு ஒருவார காலத்தில் அரசியலமைப்பின் 20வது திருத்தத்துக்கான மூல வரைபை கொண்டு வருவதாக  முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்ற அக்கிராசன  உரையில் வாக்குறுதி வழங்கியதால் பெரும்பான்மை ஆதரவுடன்  19வது திருத்தம் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கினோம்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஒருவார காலம் அல்ல முழு  பதவி காலத்திலும் 20வது திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நடைமுறைப்படுத்தப்பட்ட  அரசியலமைப்பின் 19வது திருத்தம் முத்துறையினருக்குடையில் அதிகாரம்  தொடர்பான பிணக்குகளை  ஏற்படுத்தியது.

  உயர்  அரச  பதவிகளுக்கு  தலைவர்,  உறுப்பினர்களை நியமிக்கும் போது  அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மலினப்படுத்தியது அரசியல் கட்சிகளின் தேவைக்காக   அரசியலமைப்பு பேரவை செயற்பட்டது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  சம்பவத்துடன்   தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க முடியாத நெருக்கடி நிலையும்  அரசியலமைப்பு பேரவையால்  ஏற்படுத்தப்பட்டது. 19வது திருத்தத்தை மக்கள் ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றின்ஊடாக புறக்கணித்து விட்டார்கள்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்,  20வது திருத்தம் ஆகியவை தொடர்பில் மக்களுக்கு  வாக்குறுதி வழங்கினோம். புதிய அரசியமைப்பு உருவாக்கத்திற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாகவே 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தம் ஊடாக  தற்போது எதிர் தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்  கொள்கிறார்கள்.