சுற்றுலாத்துறை மக்களை சேரவில்லை என்றால் அது சுற்றுலாத்துறையாக இருக்கமுடியாது. சுற்றுலாத்துறையானது மக்களை வெளியேற்றுவது அல்லவென உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்செயலாளர்  தாலிப் ரிபாய் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் மாநாடு முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில் இடம்பெற்றது.

கடந்த கால அரசாங்கம் முதல் தற்போதைய நல்லாட்சி  அரசாங்கம் வரை கரையோர காணி அபகரிப்பு தொடர்பாக ஜெட் விங் ஹோட்டலில் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் பொதுச்செயலாளர் தாலிப் ரிபாய் குழுவினருக்கும்  பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றது .

இச் சந்திப்பில் காணி அபகரிப்பு, சாதாரண மக்கள் சுற்றுலாத் துறையில் எந்தவிதமான பலாபலனும் அடைவதில்லை மற்றும் பல  விடயங்கள்  தொடர்பில் கலந்துரையாடப்பட் டன.

குறித்த கலந்துரையாடலில் கருத்துத்தெரிவித்த உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்செயலாளர்  தாலிப் ரிபாய்,

சுற்றுலாத்துறை மக்களை சேரவில்லை என்றால் அது சுற்றுலாத்துறையாக இருக்கமுடியாது ,பணம் சம்பாதிக்கும் நோக்கம் அல்ல. 

ஒத்துழைப்பு  மிக முக்கியம் ,ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது ,இதன் மூலம் ஒருவர் பாதிப்படைவார் என்றால் அந்த இடத்தில் சுற்றுலாத்துறையை அமைக்க முடியாது.

நான் உண்மையில் பெருமை அடைகின்றேன்  இங்கு நடைபெற்ற மாநாட் டைவிட, இந்த மக்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடிந்துள்ளது .

என்னுடன்  இலங்கை அரசாங்க  பிரதிநிதிகள் இங்கு இருக்கின்றார்கள் இவர்கள் மூலம் உங்களது விடயங்களை கதைத்து ஒரு முடிவுக்கு வரமுடியும் .

இருந்த போதிலும் காணி சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. என்னால் பதில் தர முடியாது. மக்களுக்கு பாதிப்பு இருக்குமாயின் சுற்றுலாத்துறை மேற்கொள்ள முடியாது.

ஆகவே அனைவரும்  ஒன்றிணைந்து சுற்றுலா அபிவிருத்தியில் சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதையே நான் விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார் .

இதேவேளை, மாநாடு இடம்பெற்ற போது  பாசிக்குடா காணி அபகரிப்பு சம்பந்தமாக பிரஜா அபிலாஷை அமைப்பு  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சீ.யோகேஸ்வரனிடம் கேள்வியொன்றை எழுப்பிய போது, “ இது உள்வீட்டு விடயம் இதை ஐக்கிய நாடுகளிடம்  கதைப்பது உகந்தது அல்ல” என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.