பண்டாரகம பொலிஸாரால் பாணந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஹெரோயினுடன்  இன்று திங்கட்கிழமை பிலியந்தல திஸ்ஸ மாவத்தையில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் 30 இற்கும் அதிகமான கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவராவார். தங்கச் சங்கிலி கொள்ளை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்தமைக்காக குறித்த சந்தேகநபருடன் பிரிதொருநபரும் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே குறித்த இருவரும் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக கடமையிலிருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரி லலித் அபேசேகரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரோரா தெரிவித்தார்.

சந்தேகநபர் தொடர்பில் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்ட போது அவர் போதைப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பிலியந்தல திஸ்ஸ மாவத்தைக்கு வந்துள்ளதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் பொலிஸாரிடமிருந்து தப்பியதிலிருந்து சுமார் ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்து மற்றைய சந்தேகநபருடன் இணைந்து பிலியந்தல , மொறட்டுவ மற்றும் மொரட்டுமுல்ல ஆகிய பிரதேசங்களில்  4 மோட்டார் சைக்கிள்களையும் 8 தங்கச்சங்கிலிகளையும் 10 000 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டமை தெரியவந்துள்ளது.

கொள்ளையிட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள்களை அந்தந்த பிரதேசங்களிலேயே விட்டுச் சென்றுள்ளதாகவும் தங்கச்சங்கலிகளை ஹோமாகம உள்ளிட்ட பிரதேசங்களில் அடகு வைத்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.