( எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ் ஆகியோர்,  சி.சி.டி. எனப்படும்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அந்த விவகாரத்தில் 4 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி.யின் முன்னாள் பொலிஸ் அதிகாரி பிரேமதிலகவை சி.சி.சி. பெயரிட்டிருந்த நிலையில் அவர் இன்று சரணடைந்துள்ளார். 

கம்பஹா நீதிவான் நீதிமன்றில்  சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர் இவ்வாறு சரணடைந்ததை தொடர்ந்து, எதிர்வரும் 17 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன உத்தரவிட்டார்.

 நவரத்ன பிரேமதிலக எனும் குறித்த முன்னாள் சி.ஐ.டி. அதிகாரியை கடந்த 3 ஆம் திகதி வியாழனன்று சி.சி.டி. சந்தேக நபராக பெயரிட்டு அவரது வெளிநாட்டு பயணத்தையும் தடைச் செய்திருந்தது.

 பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.