அன்புடன் ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா அவர்களுக்கு,

ஐயா, நீதியரசர் விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு நீங்கள் வெளிப்படுத்திய பிரதிபலிப்பு காரணமாகவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதத்தலைப்பட்டேன்.

விக்கினேஸ்வரனின் உரை குறித்து கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருந்த போதிலும், அவருக்குப் பதிலளித்து சபையில் நீங்கள் நிகழ்த்திய உரையே மிகவும் உறைப்பானதாக இருந்தது.

சபைக்குள் அரசாங்கத்தரப்பினரைக் காட்டிலும் சஜித் பிரேமதாஸவின் அணியினரே மிகவும் ஆக்ரோஷமான முறையில் விக்கினேஸ்வரனுக்கு எதிராகக் கிளம்பியதைப் பார்க்கும்போது நீங்களும் ஒரு முக்கிய தலைவராக இருக்கின்ற அந்த அணி வரும் நாட்களில் எத்தகைய அரசியல் போக்கை - குறிப்பாக இன உறவுகளைப் பொறுத்தவரை - கடைப்பிடிக்கப் போகிறது என்பது தெளிவாக விளங்குகின்றது.

அதாவது, ராஜபக்ஷாக்களை விடவும் சிங்கள பௌத்தர்களுக்காக அதிகளவில் குரல்கொடுக்கும் சக்தியாக முந்திச்செல்ல நினைக்கிறீர்கள். அதற்கு உங்களுக்குத் தமிழர் தரப்பில் வேறு யாரும் தேவையில்லை.

விக்கினேஸ்வரனே போதும்.

புதிய பாராளுமன்றம் கூடிய அன்றே நாட்டின் இனஃமொழிப்பிரச்சினை கிளம்பியது ஒன்றும் ஆச்சரியமானதாக இருக்கவில்லை. ஆனால் தனது கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்திருக்கும் நீதியரசர் தனது கன்னி உரையில் தெரிவித்த கருத்துக்கள் மூலமாகவே பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

புதிய சபாநாயகரை வாழ்த்தி நிகழ்த்திய குறுகிய உரையில் விக்கினேஸ்வரன், சர்வதேச சாசனங்களுக்கு அமைவான முறையில் தமிழர்களுக்கு இருக்கின்ற சுயநிர்ணய உரிமை குறித்து வலியுறுத்தினார். சிங்களப் பெரும்பான்மைவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் எச்சரிக்கை செய்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் தொன்மை வாய்ந்த மூலமுதல் மொழி தமிழ் என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்த அவர் 'உலகில் வாழும் மிகவும் புராதன மொழியும் இலங்கையின் முதல் பூர்வகுடிகளின் மொழியுமான தமிழில் உங்களை வாழ்த்திவிட்டு, இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் தொடருகிறேன்" என்றும் சொன்னார்.

ஆனால் அந்த மொழியின் பெருமையைக் குறிப்பிடுவதற்கு அவர் பயன்படுத்திய அடைமொழிதான் உங்களில் பலரை சினமூட்டியிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் அந்த அடைமொழியைத் தவிர்த்திருக்கலாம் என்று விக்கினேஸ்வரனிடம் எவராவது கூறினால், தான் ஒன்றும் பொய்யைப் பேசவில்லையே என்றுதான் சொல்வார் என்பது நிச்சயம்.

உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று கூறிய முதலாவது தெற்காசிய அரசியல்வாதி விக்கினேஸ்வரன் அல்ல. அவ்வாறு கூறிய கடைசி ஆளாகவும் அவர் இருக்கப்போவதில்லை.

கடந்த வருடம் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடியும் கூட உலகில் மிகவும் பழமைவாய்ந்த மொழி என்று தமிழை வர்ணித்தார். அதற்காக நீங்கள் அவரை குறைகூறமுடியுமா?

இனவெறித்தனமான உரைகளை நிகழ்த்தவதன் மூலம் பிரபாகரனைப் போன்று நடப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று விக்கினேஸ்வரனை நீங்கள் எச்சரிக்கை செய்தீர்கள். அதற்கு அவரது வயதும் போதாது என்றும் நையாண்டியாகக் கூறினீர்கள். அவரது உரை ஏனைய சமூகங்களை மலினப்படுத்துவதாகவும் தாய்நாட்டை பாராளுமன்றத்திற்குள் தரங்குறைத்து அவமதிப்பதாக அமைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினீர்கள்.

தமிழ்மக்களினால் பேசப்படும் மொழியே இலங்கையின் மிகவும் பழமையான மொழி என்று விக்கினேஸ்வரன் கூறியதை, தமிழர்களுக்குப் பிறகுதான் சிங்களவர்கள் இந்த நாட்டிற்கு வந்தார்கள் என்று அர்த்தப்படுத்துவதாக நீங்கள் ஆத்திரப்பட்டீர்கள். இந்த நாட்டில் சிங்கள இனத்தை மலினப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்யும் எவருக்கும் நீங்கள் ஒருபோதும் தலைவணங்கப் போவதில்லை

என்றும் சிங்கள இனத்தை அவ்வாறு தரந்தாழ்த்த முயற்சித்த எந்த இயக்கமும் நீண்ட நாட்கள் நிலைத்ததில்லை என்றும் சொன்னீர்கள்.

அமிர்தலிங்கம் சிங்களவர்களுக்கு எதிராகத் தமிழ் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இறுதியில் அதே இளைஞர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார் என்றும் பிறகு இந்த நாட்டைப் பிரித்து தனிநாடொன்றை அமைப்பதற்கு முயற்சித்த பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் தங்களுக்குக் கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்கவேண்டுமே தவிர, சிங்களவர்களைத் தரந்தாழ்த்துவதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.

என்றும் அவ்வாறு செய்ய முயற்சித்தால் முகங்கொடுக்க நேரிடும் விளைவுகளால் பின்னர் கவலைப்பட வேண்டிவரும் என்றும் அச்சுறுத்தினீர்கள்.

இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையினரான சிங்களவர்களுடன் சேர்ந்து வாழலாம். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டவராகவே நீங்கள் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஈழப்போரின் இறுதிக்கட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2008 பிற்பகுதியாக இருக்கவேண்டும். கனடாவின் பத்திரிகையொன்றுக்கு போர் நிலைவரங்கள் குறித்து நேர்காணலொன்றை வழங்கினீர்கள். 'தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி, அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையினாலேயே போர்மூண்டது. இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது. சிங்களவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்" என்று நேர்காணலில் சொன்னீர்கள்.

தமிழர்களை சமத்துவமானவரகளாக நோக்குவதற்கு நீங்கள் தயாரில்லை என்பதுடன் இலங்கை ஒரு பல்லினநாடு என்பதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதுவே இன்றைய நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள உங்களில் எவரும் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்று உரிமைகோருகின்ற உங்களுக்குத்தான் ஒரு ஜனாதிபதித்தேர்தலில் வடக்கு, கிழக்குத் தமிழ்மக்கள் மாத்திரமல்ல, மலையகத்தைச் சேர்ந்த தமிழ்மக்களும் அமோகமாக வாக்களித்தார்கள். ஆனாலும் போரின் வெற்றிக்கு நீங்கள் உரிமைகோருவதன் மூலம் அரசியல் பயனடைவதை உங்களது சிங்களமக்களே விரும்பவில்லையே.

போர் முடிந்த பிறகு உலகின் மிகவும் தலைசிறந்த இராணுவத்தளபதி என்று உச்சிகுளிர உங்களைப் பாராட்டியவர்களாலேயே நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள்.

தங்களுக்கு எதிராக போரை முழுமூச்சுடன் முன்னெடுப்பதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அறவே வெறுத்து, அதே போரை களத்தில் நின்று நடத்திய உங்களுக்கு தமிழ்மக்கள் அமோகமாக ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததை என்னவென்று சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தொன்மை குறித்து அதீதமாக தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி பேசத்தொடங்கினால் அதறக்கு முடிவிருக்காது. நாம் அடிப்படை மனிதாபிமானத்தை மதிக்காத நாகரிக உலகிலிருந்து விடுபட்ட இரு சமூகங்களாக எமது குணாதிசயங்களை வெளிக்காட்ட வேண்டிய நிலையே வரும்.

ஆதிவாசிகள் போன்றே நாம் அடிபட வேண்டியிருக்கும். 'இனவெறிக்குத் தடுப்பு மருந்து கிடையாது" என்று அண்மையில் கமலா ஹரிஸ் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கு மாத்திரமல்ல, எந்த இனத்தவர்களுக்கும் அது பொருந்தும்.

இப்படிக்கு,

ஊர்சுற்றி