கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 815 கிலோகிராம் மஞ்சள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 30 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே உரைப் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 இற்கும் 31 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பயணித்ததாக கூறப்படும் சிறிய ரக லொறியொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய மஞ்சள் கடற்படையினரின் விஷேட தேடுதல் நடவடிக்கையால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.