(இராஜதுரை ஹஷான்)

 நிறைவேற்ற அதிகாரத்தை மைத்திரி-  ரணில்  பங்குப்போட்டுக் கொண்டதால் நாடு பாரிய விளைவுகளை எதிர்க்  கொண்டது.  பலமான  அரச நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபிக்கவே  ஜனாதிபதிக்கு  நிறைவேற்று அதிகாரம் முழுமையாக 20வது  திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளது.  இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதால் எவ்வித பாதிப்பும்  ஏற்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

  கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

   நல்லாட்சி  அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் ரணில்- மைத்திரி ஆகியோருக்கு இடையில்  பகிர்ந்தளிக்கப்பட்டுக் கொண்டதால்   நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்தது.  அரசியலமைப்பின்  19வது திருத்தம் பாராளுமன்றத்தை   பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை   பலவினப்படுத்தியது. இறுதியில் நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் முரண்பட்டுக்  கொண்டமை மாத்திரமே    பெறுபேறாக அமைந்தது.

   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவிற்கு   நிறைவேற்று  அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டதன் காரணமாகவே   30வருட கால சிவில் யுத்தம்  குறுகிய காலத்தில் முடிவிற்குகொண்டு வரப்பட்டு நாடு பொருளாதார ,நிர்மாணத்துறையில்   முன்னேற்றமடைந்தது.

2015ம் ஆண்டு மாற்றத்தை தொடர்ந்து ராஜபக்ஷர்களின் அரசியல் பிரவேசத்தை  தடுக்க   19வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் நாட்டு  மக்கள்  அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தையும்  தோற்கடித்து மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையில் பலமான  அரசாங்கம் மீண்டும்    மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

  அரசியலமைப்பின் 20வது திருத்தத்தில்   ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை  ஏற்றுக்  கொள்ள கூடிய விடயமாகும்.  இரட்டை குடியுரிமை கொண்டவர்   அரசியலில் செல்வாக்கு  செலுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.ஜனாதிபதியுடன்  அரசாங்கம் இணக்கமாக  செயற்பாடும்.    அரசாங்கம் பொறுப்பற்ற  விதத்தில் செயற்படும்   வேளையில் தான் ஜனாதிபதிக்கும்- அரசாங்கத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்றார்.