(ஆர்.ராம்)

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றக்குழுவிலேயே தீர்க்கமான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதிக்குரிய மட்டுப்பாடுகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு, பாராளுமன்றம் தொடர்பான விடயங்களில் மாற்றங்களை செய்வதற்கான அரசாங்கம் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தினை வர்த்தமானியில் அறிவித்தள்ளது. 

இந்நிலையில் அச்சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மற்றும் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

20ஆம் திருத்தச்சட்டமூலமான வர்த்தமானி அறிவித்தலில் விடுக்கப்பட்டள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தியுள்ளோம். 

எனவே இந்த விடயத்தினை நாம் பக்குமாக கையாள வேண்டியுள்ளது. ஜனநாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக பாராளுமன்றக்குழு கூடவுள்ளது. எதிhவரும் எட்டாம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் எமது உறுப்பினர்கள் அனைவரும் சமூகம் தரவுள்ளனர். 

அதன்போது நாம் இந்தக் கருமம் தொடர்பில் கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்கவுள்ளோம். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை எமது பாராளுமன்றக்குழு கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. 

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடனும், தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளோம். இந்த விடயத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் ஆராயாவுள்ளோம் என்றார்.