(செய்திப்பிரிவு)

30 இலட்சம் ரூபா பெறுமதியான 800 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்று விஜய கடற்படையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ நிறையுடைய ஒரு தொகை மஞ்சள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

மஞ்சள் பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  கடற்படையினரால் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.