(ஆர்.ராம்)

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் 'இந்தியா தான் எல்லாமே' என்ற நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்தியாவைத் தாண்டி அணுவும் அசையாது என்ற பிம்பமும் இன்னமும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தியாவின் இந்தப் பாத்திரத்திற்கு தற்போது இலங்கையின் ஆட்சியாளர்களால் பலத்த சாவாலொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினைக்கு தீர்வளிப்பதற்காக இந்திய,இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில்  கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற புதிய ஆட்சியாளர்களின் கோசங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. 

இந்தக் கோசங்கள் நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றபோது, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாகொண்டிருக்கும் 'பிம்பம்' நிச்சயம் உடைந்துவிடும். அவ்வாறான நிலைமை இந்தியாவுக்கு ஆசியப்பிராந்தியத்தில் காணப்படும் 'ஆதிக்கத்தை' மலினப்படுத்துவதோடு, இராஜதந்திர ரீதியிலும் 'முதன்மைத்தான பாத்திரலிருந்து' அகலவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தும்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான முதற்படியாக, தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பாக இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன்னதாக 1987ஆம் ஆண்டு இந்திய, இலங்கையுடன் ஒப்பந்தம் செய்தது. 

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர்களின் பூர்வீக நிலமாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இலங்கை அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் செய்யப்பட்டு மாகாண முறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 13ஆவது திருத்தம் ஏட்டில் உள்ளபடி நாட்டில் இன்னமும் நடைமுறையாகவில்லை.

வரலாறு அப்படியிருக்க, பொதுத்தேர்தலுக்கு பின்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப்பீடமேறியவர்களுக்குள்ளிருந்து இந்திய, இலங்கை ஒப்பந்த எதிர்ப்புவாதம் வெளிக்கிளம்பியுள்ளது.

குறிப்பாக, விடயத்திற்கு பொறுப்பான இராஜங்க அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகரவே, மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்பதில் 'உடும்புபிடியாக' இருந்து வருகின்றார். இவருடைய 'உடும்புபிடி' நிச்சயமாக அவருடைய சுய சிந்தனை கொள்கையில் ஏற்பட்டதொன்று அல்ல. 

13ஆவது திருத்தத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலைமைகளால் அன்று மாகாண சபை முறைமையை விரும்பாத தமிழ்த் தரப்புக்களும், முஸ்லிம் தரப்புக்களும் இன்று மாகாண சபை முறைமையை பாதுகாத்து தக்கவைப்பதற்காக பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 

தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று தமிழ் பேசும் தரப்புக்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயத்திற்கு படையெடுத்துள்ளன.

அதனைவிடவும், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பல தரப்பினரும், இந்தியாவுக்கு 'அழுத்தங்களை' பிரயோகிக்கும் வகையில் ஊடக அறிக்கைகளையும், ஊடகவியலாளர் சந்திப்புக்களையும் நடாத்தி வருகின்றார்கள். இவ்வாறான வழிமுறைகள் ஊடக இந்தியாவுக்கு அழுத்தங்களை அளிக்க முடியும் என்பது தமிழ் பேசும் தரப்பின் இராஜத்தந்திரமாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், உடனடியாக அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச்சட்டத்தினையே மேற்கொள்ளவுள்ளது. அதன்பின்னரே, புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளில் தீவிரம் காட்டவுள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் மாகாண சபைகளை வெள்ளை யானைகளாகவும், அவை, அரசியல் நாகரீகமற்ற தரப்புக்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு வழிவகுக்கின்றது என்றும், மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கவே முடியாது என்பதால் அந்த அதிகாரங்களையாவது பிடுங்கிவிட வேண்டும் என்றும், செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக 13ஆவது திருத்தத்தினை மறுசீமைப்புச் செய்ய வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார். 

இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அவற்றுக்கு செயல்வடிவமளிக்கவே பிரயத்தனம் செய்வார். அவரது பிரயத்தனம் தமிழ் பேசும் தரப்பினைப் பொறுத்தவரையில் நேர்மறையான பிரதிபலிப்பாகவே இருக்கப்போகின்றது. 

அதுமட்டுமன்றி, தற்போதே இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினையும், 13ஆவது திருத்தத்தினையும் எதிர்க்கும் ஆளும் தரப்புக்குள்ளிருந்தான கோசங்கள் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையப்போகின்றது. 

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களால் எடுத்தஎடுப்பிலேயே இந்தியாவின் 'பிடி'யை தளர்த்திவிட முடியுமா என்றொரு கேள்வி தொடர்ச்சியாக இருக்கின்றது. ராஜபக்ஷவினரின் கடந்த ஆட்சியில் இந்தியாவை 'கைவிட்ட' போக்கால் ஈற்றில் ஆட்சியே கைவிட்டுப்போன அனுபவம் அவர்களுக்கு நிறைவே உள்ளது. 

அந்தவகையில் 13ஆம்திருத்தத்தினை முழுமையாக அகற்றும் வகையில் ராஜபக்ஷவினர் நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நம்பமுடியும். 

ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போதுள்ளபடி நிச்சயமாக வைத்திருக்கப்போவதில்லை. அதற்காக, தமது தரப்புக்குள்ளிருந்து 13இற்கு எதிரான கோசங்களை அதிகரிக்கச் செய்து 13ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற 'அற்பசொற்ப' அதிகார விடயங்களையும் பிடுங்கி எறிவதற்கு முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

உள்நாட்டில் ராஜபக்ஷ தரப்பு, 13ஆவது திருத்தம் சம்பந்தமாக தமக்கு வேண்டிய விடயங்களை சாதிக்க காய்களை நகர்த்தினாலும் இந்திய, இலங்கை ஒப்பந்ததின் பங்குதாரர்களாக இருக்கும் இந்தியத் தரப்பினரை 'முறையாக' அணுகுவதற்கும் 'சிக்கல்கள்' எழுகின்றபோது அவற்றிலிருந்து மீள்வதற்கும் உரிய வழிமுறைகளை கையாள்வதற்கென சரியான நபர் தேவையாகவுள்ளார்.

அதற்கான தெரிவாகத்தான், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்கான தூதுவராக புதுடில்லிக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது அரசாங்கம். 

உயர்பதவிகளை தெரிவு செய்யும் துறைசார் குழுவிற்கு மிலிந்த மொறகொடவின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வெகுவிரைவில் சாதகமாக அறிவிப்புக்கள் கிடைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் புதுடில்லிக்கு வழமையாக செல்லும் தூதுவர்களை போலல்லாது, இம்முறை தெரிவாகும் தூதுவரை அமைச்சரவை அமைச்சருக்குரிய உரிய அதிகாரங்களுடன் அனுப்பி வைப்பதற்கே அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. 

இந்த தீர்மானம் பற்றி தான் உறுதியாக அறிந்திருக்கவில்லை என்றுரைக்கும் பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, அயல்நாடு என்ற வகையில் இ;ந்தியவின் தூதுவராக நியமிக்கப்படுபவர் இந்திய ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்டத்தரப்பினரை அனுகவல்வராக இருக்க வேண்டும் என்பதில் அதிக கரிசனை கொண்டிருப்பதாக கூறுகின்றார். 

மேலும், நியமிக்கப்படவுள்ள இந்தியாவுக்கான தூதுவருக்கு அமைச்சரவை அமைச்சருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படுவது தொடர்பில் உறுதியாக தனக்கு தெரியாது என்று கூறும் இராஜங்க அமைச்சர், கடந்தகாலங்களில் இந்திய இராஜதந்திர நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் செயற்பட்டிருக்கின்ற முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனை வைத்துப்பார்க்கின்றபோது, தற்போதைய ஆட்சியாளர்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத்தரப்பினரை நேரடியாக அணுகவல்ல, விளக்கமளிக்கவல்ல ஒருவரையே தூதுவராக நியமிக்க திட்டமிட்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. 

இவ்வாறான நிலையில் இந்திய இராஜதந்திர தரப்புக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் மிலிந்த மொறகொட அதற்கு மிகப்பொருத்தமானவர் என்று அரசாங்கம் கருதுகின்றது. 

மேலும் அண்மைய காலங்களில் மிலிந்த மொறகொட தனது 'பாத் பைன்டர்' அமைப்பின் ஊடாக இந்திய இராஜதந்திர தரப்புக்களுடனான உறவுகளை நெருக்கமாக்கி கொண்டுள்ளார். அந்த உறவுகள் மூலமாக ராஜபக்ஷவினரின் மீள் வருகைக்கும் உதவிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்தச் செயற்பாடுகள் அவருடைய 'இந்திய உறவுகளின்' பலத்தினை நிச்சயம் புடம்போட்டுக் காட்டியிருக்கும். 

அத்துடன் அந்த அமைப்பில் தற்போதைய வெளியுறவுகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் பணியாற்றியுள்ளார். ஆகவே ஜயநாத் கொலம்பகே, மிலிந்த மொறகொட ஆகியோருக்கு இடையிலான நெருக்கமும், மிலிந்தமொறகொடவுக்கும், இந்திய இராஜதந்திர தரப்புக்களுக்கும் இடையிலான நெருக்கமும் தமக்கு இரட்டிப்பு பலம் என்றே ஆட்சியாளர்கள் கருதமுடியும். 

மிலிந்தமொறகொடவைப் பொறுத்தவரையில், ஐக்கியதேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக 2000 ஆண்டு பாராளுமன்றுக்கு பிரவேசித்தவர் 2001இல் மீண்டும் கொழும்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு, சுற்றுத்துறை, பொருளாதார மறுசீரமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அமைச்சராக செயற்பட்டள்ளதோடு திட்டங்களை செயற்படுத்தலும், மேம்படுத்தலும் பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார். 

அத்துடன் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தின் சார்ப்பில் கலந்துகொண்டார். பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலமையிலான ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படட்டவர் 2010பொதுத்தேர்தலில் தோல்வி கண்டார். 

அதன் பின்னர் 'இராஜதந்திர உறவுகளை' அடிப்படையாக வைத்து 'பாத் பைன்டர்' என்ற அமைப்பை உருவாக்கி கடந்த பத்து வருடங்களாக பணியாற்றி வருகின்றார். அத்தகையவர்  ஆட்சிமாற்றம் இடம்பெற்று சொற்பகாலத்திலேயே, மாகாணசபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது எனவும், தேவையற்ற பாரிய செலவை ஏற்படுத்தும் முறைமை எனவும், உள்ளுராட்சி சபைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவரது பாத்பைன்டர் அமைப்பின் ஆய்வின் ஊடாக கருத்து வெளியிட்டு இருந்தார்.

இத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் ஒருவர், ஏற்கனவே மாகாண சபைமுறைமைக்கு எதிரான  நிலைப்பாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களினால் 'அதிகாரங்களுடன்' நியமிக்கப்படுகின்றார் என்றால் அவர் ஊடாக தமது எண்ணக்கருக்களை இந்தியத் தரப்பினுள் 'விதைத்து' சிக்கல்களின்றி தமது செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுப்பதற்கே ஆகும். இதுவே ராஜபக்ஷ தரப்பின் இராஜதந்திர நகர்வாக இருக்கின்றது.

அதேநேரம், புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை தக்கவைப்பதற்காக இந்திய தரப்புக்கள் நேரடியாக தலையிட முடியாத தர்மசங்கடமான நிலைமையில் இருக்கின்றன. இதனை இந்திய இராஜதந்திர தரப்புக்களே 'மறைமுக மொழியில்' வெளிப்படுத்தி விட்டன. 

ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணை, மற்றும் அரசுக்குள் இருக்கும் 13இற்கு எதிரான தரப்புக்களின் 'கிடுக்கிப்பிடி' இந்தியாவின் தலையீட்டுக்கு நிச்சயம் தலையிடியாகவே தொடரப்போகின்றது. 

ஆக, இந்தியா, இந்த விடயங்களை கையாள்வதற்கு தமது தரப்பில் விசேட பிரதிநிதியை நியமித்து 'பிராந்திய சமநிலையில் குட்டையை குழப்பி' உள்நாட்டில் எதிர்ப்பலைகளை சம்பாதிப்பதை விடவும் தனக்கு நெருங்கிய ஒருவர் டெல்லியில் இருந்தால்  அவர் ஊடாக தமது நிலைப்பாட்டினை இலகுவாக நகர்த்த முடியும் என்ற வழமையான தமது பாணியில் கணக்கிடலாம். அந்தவகையில் இந்தியத்தரப்பும் மிலிந்த மொறகொடவை புதுடில்லிக்கு அனுப்புவதற்கு 'பச்சை' சமிக்ஞையும் காட்டலாம்.

ஆனால், தமது நலன்களை மட்டும் மையப்படுத்தி இராஜந்திர நகர்வுகளைச் செய்யும் இந்தத் தரப்புக்களில்; வெற்றியடையப்போது யார்? என்பது தற்போதைக்கு பதிலற்ற வினாவாகவே நீடிக்கப்போகிறது.