பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் 'விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?' என வினவினர்.

அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்கு தந்தை என்ற வகையில் அவர்களுக்கு எவ்வாறு வாசிப்பது என்பதைக் கற்பிக்க வேண்டியுள்ளது. அதனால் நான் அந்தப் பணியையே தெரிவு செய்யவுள்ளேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.