(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 20வது திருத்ததை எதிர்  தரப்பினர்  உயர் நீதிமன்றத்தின் சவாலுக்குட்படுத்த முடியும்.  எவ்வித  தடைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தாது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை காட்டியிலும்  20வது திருத்தம் சிறந்ததாகவே உள்ளது என துறைமுக அபிவிருத்தி  அமைச்சர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

 களுத்துறை பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில், அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு பொருந்தும் வகையில்  அரசியலமைப்பு திருத்தம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கினோம்.     இதனை கருத்திற் கொண்டே பெரும்பான்மையின  மக்கள்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  தலைமையிலான தலைவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

நாட்டு மக்களுக்கு  வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றும் விதமாகவே அரசியலமைப்பின்  20வது திருத்தம்  உருவாக்கப்பட்டு  சட்டமூல வரைபு  வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறைப்பாடுகள் காணப்படுமாயின்  எதிர் தரப்பினர் சட்ட மூலத்தை  சவாலுக்குட்படுத்தி  நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யலாம். எவ்வித தடைகளையும்  அரசாங்கம்  ஏற்படுத்தாது.

ஜனாதிபதிக்கு அதிகாரங்கள்  முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.  அரச நிர்வாகம்   முறையாக இடம் பெற வேண்டும். அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரமல்ல ஏனைய துறைகளின் அதிகாரங்களையும்  மலினப்படுத்தியது . இதன் பெறுபேறு  பாரதூரமாக  அமைந்தது.  இவ்வாறான நிலைமை இனியொருபோதும் ஏற்படாது.