(நா.தனுஜா)

இவ்வாண்டின் முதல் ஆறுமாதகால முடிவில் அரசாங்கம் மீளச்செலுத்த வேண்டிய கடன்தொகையின் அளவு 14,052 பில்லியன் ரூபா என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கின்றது.

2019 ஆம் ஆண்டின் முடிவில் 13,031.5 பில்லியன் ரூபா மீளச்செலுத்தப்பட வேண்டிய நிலுவைக்கடன் தொகையாகக் காணப்பட்டது. எனவே ஏற்கனவே நிலுவையில் இருந்த கடன்தொகையுடன் சேர்த்து இவ்வருடத்தின் ஜுன்மாத நிறைவில் மீளச்செலுத்தப்பட வேண்டிய கடன்தொகை 14,052 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருக்கின்றது. கடந்த வருட இறுதிக்கும் இவ்வருடம் ஜுன் மாதத்திற்கும் இடைப்பட்ட 6 மாதகாலத்தில் கடன்தொகையில் 1000 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முதற்தடவையாக மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைக்கடன் தொகையின் அளவு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,000 பில்லியன் ரூபாவைக் கடந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில் மீளச்செலுத்தப்பட வேண்டிய கடன்தொகையின் அளவு 14,024.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன் அது மேமாதத்தில் 13,895.9 பில்லியன் ரூபாவாகக் குறைவடைந்தது. எனினும் ஜுன்மாத நிறைவில் அது 14,052.2 பில்லியன் ரூபாவாக மீண்டும் அதிகரித்தது.

2020 ஆம் ஆண்டில் முதல் ஆறுமாதகாலத்தில் இலங்கை மீளச்செலுத்த வேண்டிய கடன்நிலுவை 6,629.1 பில்லியன் ரூபாவிலிருந்து 7,530.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. அதேவேளை அதேகாலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக்கடன்களின் அளவு 6,402.4 பில்லியன் ரூபாவிலிருந்து 6,521.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.