வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் “வடக்கு பிரிமியர் லீக்” சுற்றுப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இடம்பெறும் சுற்றுப்போட்டியில் வடக்கை சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் அணிகள் பங்குபற்றுகின்றன.

இருபது பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் இன்றையதினம்  காலை வவுனியா மற்றும் முல்லைத்தீவு அணிகளும் மாலை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் அணிகளும் மோதிக்கொள்கின்றன.

இன்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பித்த இப்போட்டி வவுனியா நகரமத்தியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தடியில் இருந்து ஏ9 பிரதான வீதி வழியாக ஐந்து மாவட்ட அணி வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

இப்போட்டிகள் லீக் முறையில் இடம்பெறும் அதேவேளை ஐப்பசி மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்று இறுதிப்போட்டி அன்றையதினம் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நிகழ்வில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ப.சத்தியலிங்கம், வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வேலாயுதம் சுந்தரலிங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.