(ஆர்.கலைச்செல்வன்)

அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையில் இருந்து 38 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் இந்தியா நோக்கிச்சென்ற எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் நேற்று முன்தினம் தீப்பரவல் ஏற்பட்டது.

ஈராக்கில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற கொண்டிருந்த மேற்படி எண்ணைய்க் கப்பலே வியாழக்கிழமை அதிகாலை தீ பற்றிக் கொண்டது

கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தீ பற்றக் காரணமென கூறப்பட்டது. உடனடியாக மாலுமிகள் மீட்கப்பட்டு  பிரிதொரு கப்பலுக்கு மாற்றப்பட்டனர்.

குறித்த எண்ணைய்க் கப்பல் தீபற்றியமையை அடுத்து இலங்கை , இந்திய அரசுகள் விழித்துக் கொண்டன. எண்ணைய் வெளியேறுமானானல் சுமார்  25 வருடகாலம் கடல் சூழல் பாதிக்கப்படாலம் என்று சூழல் பாதுகாவலர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

குறித்த கப்பலில் 2 இலட்சத்து 70 ஆயிரம் தொன் மசகு என்ணைய்யும் , கப்பல் பயணிப்பதற்கு 1700 தொன் எரிபொருளும் காணப்பட்டது. இதுவே அனைவரையும் அச்சம் கொள்ள செய்ததாகும். 

அத்தோடு அண்மையில் ஜப்பானுக்கு சொந்தமான  எண்ணைய்க் கப்பலொன்று மொரீசியஸில் விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளவுபட்டதை அடுத்து அதிலிருந்து எண்ணைய்க் கசிவு ஏற்பட்டு பல மைல்கள் கடலில் சங்கமித்தது. இதானல் உயிரினங்ள் பல உயிரிழக்க நேர்ந்தது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி குறித்த கப்பல் மொரீசியஸ் தீவின் பவளப்பாறைகளில் மோதி விபத்துக்குள்ளனாதில் ஆயிரம் தொன் எண்ணைய்க் கடலில் கலந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவம் இலங்கையிலும் நேராதிருக்கவே இலங்கை , இந்திய படையும் கூட்டாக செயற்பட்டு சங்கமன் கண்டி பகுதியில் தீ பற்றிய கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் இந்திய கடற்படை உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையில் தீயினை கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரவித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் இயந்திர அறையில் சிறிதளவு தீ எரிந்துக்கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இயந்திர அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கப்பல் செயலிழந்த பின்னர் தானாக மிதந்து ஆழமற்ற பகுதிக்கு வருவதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்திய கடற்படையும் நியூ டயமனில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளது.

எனினும் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை கப்பல்கள் , இந்திய விமானங்களுடன் சேர்ந்து கப்பலில் ஏற்பட்ட தீயினை நேற்று இரவு 7.00 மணியளவில் கட்டுப்படுத்தியதாக இந்திய கடற்படை தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

அத்தோடு இந்திய கடற்படையானது சிறப்புக் குழுவுடன் குறித்த கப்பலை ஆழமற்ற பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக கப்பலை இழுக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் தொடர்ந்தும் இச் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய கடற்படை ஆறு கப்பல்களையும் இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ள அதேவேளை இலங்கையில் உள்ள கப்பல்களும் , தீயணைப்பு கருவிகளும் திருகோணமலை மற்றும் கொழும்பில் இருந்து குறித்த பகுதிக்கு அனுப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கப்பலில் ஏற்பட்ட தீயிணை முழுமையாக கட்டுப்படுத்தி சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இரு நாட்டு கடற்படைகளும் தெரிவித்துள்ளன.

அதேவேளை கப்பலில் உள்ளள சுமார் 270,000 தொன் மசகு எண்ணையையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்தோடு , கப்பலில் இருந்து எவ்வித கசிவும் கடலில் ஏற்படாமல் இருப்பதற்கு பனமேனிய கப்பலின் பிரதிநிகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 22 பேரில் ஒருவர் தீயில் சிக்கி இறந்துள்ளதோடு , ஏனையோர் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

இதில் 5 கிரேக்கர்களும் , 17 பிலிப்பைன் நாட்டவர்களும் அடங்குவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 330 மீட்டர் நீளம் கொண்ட நியூ டயமன் கப்பல் லைபீரியாவைச் சேர்ந்த போரட்டோ எம்போரியோஸ் ஷிப்பிங் நிறுவனத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.