(செ.தேன்மொழி)

மாஹரகம மற்றும் கொட்டவ ஆகிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிரிஹான நோக்கிச் சென்ற  கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த சாரதி உள்ளிட்ட காரில் பயணித்த நால்வரும் கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியும் காரில் பயணித்த பிரிதொரு நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நுகேகொட மற்றும் மஹவ பகுதியைச் சேர்ந்த 27 ,33 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொட்டவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஹரகம பகுதியிலிருந்து கொட்டவ நோக்கி வந்த லொறி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹோமாகம - உடுவன பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாஹரகம மற்றும் ஹோமாகம பொலிஸார் விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரகைளை மேற்கொண்டு வருகின்றனர்.