சிலாபம் - இரணவில கரையோரப்பகுதியில் இருந்து இன்று சந்தேகத்திற்கிடமான இரு படகுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட படகுகள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் குறித்த படகுகளின் பதிவு இலக்கங்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகள் போஹோவிட்ட அல்லது கல்பிட்டி கடற்கரைப் பகுதிகளுக்கு சொந்தமான படகுகள் என சந்தேகிக்கப்படுவதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அப்பகுதியில் வந்த ஒருவர் படகுகள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோப்ப நாய்கள் மூலமாக சந்தேகநபர்களை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த படகுகளில் சட்டவிரோதமாக ஏதேனும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வேறொரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கரையோரப் பகுதிக்கு படகுகள் கொண்டு வரப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் படகுகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.